Last Updated : 08 Aug, 2020 08:11 AM

2  

Published : 08 Aug 2020 08:11 AM
Last Updated : 08 Aug 2020 08:11 AM

அயோத்தியை அடுத்து காசி, மதுராவை இந்து அமைப்புகள் குறி வைக்கும்?- முஸ்லிம் பிரமுகர்கள் அச்சம்

புதுடெல்லி

அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் அயோத்தியில் நிலப் பிரச்சனை கிளம்பி இருந்தது. உச்ச நீதிமன்றம் சென்றிருந்த இப்பிரச்சினை கடந்த வருட நவம்பரில் முடிவிற்கு வந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதைக் கட்டி முடித்தவுடன் காசியின் கியான்வாபி மற்றும் மதுராவின் ஷாயி ஈத்கா ஆகிய மசூதிகள் குறி வைக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதற்காக, ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் கிளைகளில் ஒன்றான விஎச்பியும் முயற்சிக்கும் என முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாபர் மசூதி தரப்பின் மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரி கூறும்போது, "உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை முஸ்லிம்கள் வரவேற்றோம். இதே வகை புகாரில் உள்ள காசி, மதுராவில் இந்துக்கள் இனி பிரச்சினை செய்ய மாட்டார்கள் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதியளிக்க வேண்டும்" என்றார்.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இதுபோல மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து அதன் பாதியில் ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஒரு புகார் உள்ளது. அதேபோல காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அமைந்த இடத்தின் பாதியை இடித்து அதற்கு ஒட்டியபடி அமைந்துள்ள கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகவும் புகார் நிலவுகிறது.

எனவே, அயோத்தியை சேர்த்து இவ்விரண்டையும் குறிக்கும் வகையில், ‘பாப்ரி மஸ்ஜீத் தூட்டி ஹை! காசி, மதுரா பாக்கி ஹை! (பாபர் மசூதி உடைந்தது! காசியிலும், மதுராவிலும் பாக்கி உள்ளது!)’ என்பது இந்துத்துவா அமைப்பினரின் கோஷமாக இருந்து வருகிறது. தற்போது அயோத்தி வழக்கில் இந்து தரப்பினருக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பால் ராமர் கோயிலும் அமைய உள்ளது. இதன் பிறகு காசி, மதுராவின் பிரச்சினைகள் மீண்டும் எழும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இதுகுறித்து ராமர் கோயில் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பாஜகவின் முன்னாள் எம்.பி. வினய் கட்டியார் கூறும்போது, "காசியிலும், மதுராவிலும் கோயில் கட்டுவது எங்கள் திட்டத்தில் இன்னும் உள்ளது. இதை நிறைவேற்ற நாங்கள் அமர்ந்து ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். மிகவும் கடினமான இந்தப் பணியை முடிக்க அதிக காலம் பிடிக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x