Published : 07 Aug 2020 07:09 PM
Last Updated : 07 Aug 2020 07:09 PM
இந்தியா முழுவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவுவதற்கென டெல்லி விமான நிலையம் தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 5 வகையான பயணிகள் எளிதில் வெளியேற இணையதளம் உதவும்.
இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்திறங்கும் சர்வதேசப் பயணிகள் கட்டாயமாக வழங்க வேண்டிய சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்பும் வகையிலும், நிறுவன ரீதியான தனிமைப்படுத்தல் செயல் முறையிலிருந்து விலக்கு கோரிய விண்ணப்பத்தை இணைய வழியாகப் பதிவு செய்யவும் உதவும் வகையிலும் முதன்முறையாக இணையதளம் ஒன்றை உருவாகியுள்ளதாக ஜிஎம்ஆர் குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு நிறுவனமான டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய பல்வேறு மாநில, துணை நிலை மாநிலங்களின் ஒத்துழைப்போடு இந்த இணையவழிப் படிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி 2020 ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் இந்தியாவிற்குள் வந்திறங்கும் அனைத்து சர்வதேசப் பயணிகளுக்கும் இந்த வசதி கிடைக்கவுள்ளது. இந்தியாவிற்குள் வந்திறங்கிய பிறகு நேரடியாகப் படிவங்களை அவர்கள் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லாமல் யாருடனும் எவ்வித நேரடித் தொடர்புமின்றி பயணிகள் மேலும் வசதியாகப் பயணம் செய்ய இது உதவி செய்யும்.
சர்வதேசப் பயணத்திற்கான மையமாக டெல்லி விமான நிலையம் தொடர்ந்து நீடித்து வரும். பல்வேறு நாடுகளுடன் விமான சேவைத் தொடர்புகளை இந்தியா உருவாக்கிவரும் நிலையில் சர்வதேசப் பயணிகளின் வருகை அதிகமாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், சுய அறிவிப்பு மற்றும் நிறுவன ரீதியான தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோரல் ஆகியவற்றை இணைய வழியில் செயல்படுத்தும் இந்த ஏற்பாடு விலக்கு அரசு அதிகாரிகள் அளிப்பதற்கான முடிவை உடனடியாக எடுப்பதற்கும், அல்லது வந்திறங்கும் சர்வதேசப் பயணியின் மிகச் சமீபத்திய உடல்நிலையைத் தெரிந்து கொள்ளவும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
ஐந்து குறிப்பிட்ட வகைப்படுத்தலின் கீழ் விலக்கு கோரும் பயணிகள் டெல்லி விமான நிலையத்தின் இணையதளமான www.newdelhiairport.in என்பதில் கிடைக்கும் இணையவழிப் படிவத்தை நிரப்ப வேண்டும். தங்களின் பாஸ்போர்ட் பிரதி உள்ளிட்டு இதற்கெனத் தேவைப்படும் ஆவணங்களையும் தங்களது விமானப் பயணம் தொடங்கவுள்ள நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். எனினும் சுய அறிவிப்பை மட்டுமே நிரப்பும் பயணிகளுக்கு இந்த நேர வரம்பு எதுவும் இல்லை.
விண்ணப்பத்தின் முந்தைய கோரல் எண்ணைத் தானாகவே நிரப்பி இரண்டாவது விண்ணப்பத்தை உருவாக்கும் அறிவார்ந்த வசதி இந்த இணையதளத்தில் உள்ளதால் ஒரே மாதிரியான தகவல்களையும், ஆவணங்களையும் பல்வேறு அதிகாரிகளுக்கும் வழங்கவேண்டிய தொல்லையைப் பயணிகள் தவிர்க்க இந்தச் செயல்முறையானது உதவுகிறது.
பயணிகள் முதலில் வந்து இறங்கும் இடத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனைத்து விண்ணப்பங்களும் தானாகவே நேரடியாகச் சென்றடையும் ஏற்பாடும் இதில் உள்ளது. அதைப் போன்றே, சுய அறிவிப்பு விண்ணப்பங்கள் அனைத்தும் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமான நிலைய சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற தகவலும் பயணிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். கட்டாய நிறுவன ரீதியான தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்பட்ட பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்குள்ள பரிமாற்றப் பகுதியில் இதற்கான ஒப்புகையைக் காட்டிவிட்டு, விமான நிலையத்திலிருந்து எவ்விதத் தொல்லையுமின்றி வெளியேறலாம்.
இவ்வாறு விலக்கு கோரும் பயணிகள் மட்டுமின்றி இது தொடர்பான ஏற்பாடு செய்யும் அதிகாரிகள் துரிதமாகச் செயல்படவும், விமான நிலையங்களில் பயணிகள் வந்திறங்கும் பகுதியில் நெரிசலைக் குறைக்கவும் இந்தச் செயல்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
கர்ப்பிணிகள், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மரணம், தீவிரமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் (இது குறித்த விவரம் தரப்படவேண்டும்), 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளுடன் வந்து சேரும் பெற்றோர், கரோனாவிற்கான பரிசோதனையை சமீபத்தில் மேற்கொண்டு அதில் நெகட்டிவ் என நிர்ணயிக்கப்பட்டவர்கள் ஆகிய விலக்கு அளிக்கப்பட்ட ஐந்து பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் அடங்குவோர் மட்டுமே இத்தகைய விலக்கினைப் பெற பரிசீலிக்கப்படும்.
விமான நிறுவனங்கள் பயணத்திற்கான முன்பதிவின்போதே பயணி வந்திறங்கும் இந்திய மாநில அரசுகள் மேலேயுள்ள ஐந்து குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பத்தின் அடிப்படையிலும் விலக்கு அளிக்க அனுமதிக்கக் கூடும் என பயணிகளுக்கு அறிவுறுத்தலாம்''.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT