Published : 07 Aug 2020 08:02 AM
Last Updated : 07 Aug 2020 08:02 AM
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில்,பாபர் மசூதியில் தொடங்கி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா வரையிலான முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் வருமாறு:
1528: முகலாயப் பேரரசர் பாபரின் சேனைத் தலைவர் மீர் பக்கியால் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது.
1885 : அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் அதன் அருகில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் எனவும் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மகந்த் ரகுவீர் தாஸ் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் நிராகரித்தது.
1949: பாபர் மசூதியின் மைய குவிமாடத்தின் கீழே குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானதால் அந்த கட்டடம் மூடப்பட்டது.
1950: குழந்தை ராமர் சிலைகளை வழிபட உரிமை கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் வழக்கு தொடர்ந்தார்..
1959: சர்ச்சைக்குரிய இடத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி நிர்மோகி அகாடா வழக்கு தொடர்ந்தது.
1961 : உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்பு வாரியமும் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.
1986 பிப்.1: இந்து மதத்தினர் மட்டும் வழிபாடு நடத்த சர்ச்சைக்குரிய இடத்தை திறக்குமாறு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1989 அக்.14: சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதுள்ள நிலையே தொடரலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1990 செப்.25: அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்காக பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை தொடங்கினார்.
1992 டிச.6: கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
1993 ஏப்.3: சர்ச்சைக்குரிய இடத்தில் சில ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசு அயோத்தி சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் பல்வேறு கோணங்களை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றார்.
1994 அக்.24: இஸ்மாயில் பரூக்கி தாக்கல் செய்த மனுவில் மசூதி, இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
2002 ஏப்.: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தத் தொடங்கியது.
2010 செப். 30: சர்ச்சைக்குரிய நிலத்தை வக்பு வாரியம், நிர்மோகி அகாடா மற்றும் லாம் லல்லாவுக்கு மூன்றாகப் பிரித்து வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2011 மே 9: அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
2017 மார்ச் 21: அயோத்தி வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும்படி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் ஆலோசனை வழங்கினார்.
2017 அக்.7: அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
2018 பிப்.8: உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணையை தொடங்கியது.
2019 ஜன.8: அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என நீதிமன்றம் அறிவித்தது.
2019 மார்ச் 8: இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரை நியமித்தது.
2019 ஆக.1: மத்தியஸ்தக் குழுவினர் தங்களின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சமரச முயற்சி தோல்வியுற்றதாக தெரிவித்தனர்.
2019 ஆக.6: அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்ற அமர்வு நாள்தோறும் விசாரிக்கத் தொடங்கியது.
2019 ஆக.16: அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை நிறைவு பெற்றது.
2019 நவ.9: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.
2020 பிப்.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை பிரதமர் மோடி மக்களவையில் அறிவித்தார்.
2020 ஆக.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT