Published : 19 Sep 2015 03:24 PM
Last Updated : 19 Sep 2015 03:24 PM
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக தன்னிடம் இருக்கும் ரகசிய கோப்புகள் அனைத்தையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என தகவல் உரிமை சட்ட செயற்பாட்டாளரான சுபாஷ் சந்திர அகர்வால் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் அவரது குடும்பம் அப்போதைய அரசால் உளவு பார்க்கப்பட்டது என்றும் வெளியாகியுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்களையடுத்து, மத்திய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி இது தொடர்பான ரகசிய கோப்புகள் அனைத்தையும் உடனடியாக வெளியிடவேண்டும். இதனால் வெளிநாடுகளுடன் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற வாதம் ஏற்புடையது அல்ல, ஏனெனில் அந்த நாடுகளின் மக்களே அப்படிப்பட்ட சர்வாதிகாரிகள் தங்களது நாடுகளை ஆண்டதைப் பற்றி அவமானப்படுகின்றனர்.
சுதந்திரத்துக்குப் பின்னர் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் விடுதலைக்கு ஒரே ஒரு நபர் மட்டுமே காரணம் என்று முன்னிறுத்தி நேதாஜி உட்பட பல சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க முயற்சிகள் எடுத்துவருவது வரவேற்கத்தக்கது.
பிரிட்டிஷ் ஆட்சி பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு ஆகியோருக்கு தூக்குதண்டணை அளிக்க விசாரணை நடத்தியபோது அந்த மாபெரும் தியாகிகளுக்கு அப்போதைய அரசியல்வாதிகள் உதவி அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உட்பட விசாரித்து மத்திய அரசு அம்பலப்படுத்த வேண்டும். நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு, வரும் ஜனவரி 23 அன்று நேதாஜியின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதோடு பல்வேறு விடுதலைப் போராட்ட வீர்ர்களின் படங்களையும் ரூபாய் நோட்டுகளில் வெளியிடவேண்டும். இவ்வாறு தகவல் உரிமை சட்ட செயற்பாட்டாளர் சுபாஷ் சந்திர அகர்வால் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT