Published : 06 Aug 2020 04:13 PM
Last Updated : 06 Aug 2020 04:13 PM
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தபடி, வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்காக பிரத்யேக ரயில் விடப்படும் எனும் அறிவிப்பு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
ஆகஸ்ட் 7-ம் தேதியிலிருந்து கிசான் ரயில் மகாராஷ்டிராவின் தேவ்லாலி நகரிலிருந்து பிஹாரின் தனாபூருக்கு முதன்முதலாக இயக்கப்படுகிறது. எளிதில் அழுகும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற வேளாண் பொருட்களை மட்டும் இந்த ரயில் எடுத்துச் செல்லும்.
தேவ்லாலி நகரிலிருந்து நாளை காலை 11 மணிக்கு புறப்படும் கிசான் ரயில் 1,519 கி.மீ பயணம் செய்து, ஏறக்குறைய 32 மணிநேர பயணத்துக்குப்பின் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு தனாபூரைச் சென்று அடையும்.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலனுக்காகவும், வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்ல பிரத்யேகமா கதனி ரயில் விடப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போன்று அழுகும் வேளாண் பொருட்கள்களான காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல பிரத்யேக கிசான் ரயில் ஆகஸ்ட்7-ம் தேி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மகாராஷ்டிராவின் தேவ்லாலி நகரிலிருந்து பிஹாரின் தனாபூருக்கு நாளை இயக்கப்படும்.
நாசிக் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள், மற்ற வேளாண் பொருட்கள், விரைவில் கெட்டுப்போகக்கூடிய பொருட்கள் இந்த ரயிலில் பிஹாருக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த ரயில் மூலம் கொண்டு செல்லப்டும் பொருட்கள் பாட்னா, அலகாபாத், கட்னி, சத்னா உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கிசான் ரயில் நாசிக் சாலை, மான்மாத், ஜால்கான், புசாவல், புர்ஹான்பூர், காந்த்வால, இடார்சி, ஜபால்பூர், கட்னி, மாணிக்பூர், பிரயாக்ராஜ், சேகோகி, தீனதயாள் உபாத்யாயா நகர், பக்ஸர் ஆகிய நகரங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வேளாண் பொருட்கள் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போதுமான அளவு விலை கிடைக்கும். பற்றாக்குறையான இடங்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற திட்டத்தை மம்தா பானர்ஜி 2009-10ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார். அப்போது அழுகும் காய்கறிகள், பழங்களைக் கொண்டு செல்ல குளிர்சாதன பார்சல் வாகனத்தை அறிமுகம் செய்தார். ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT