Published : 06 Aug 2020 07:45 AM
Last Updated : 06 Aug 2020 07:45 AM
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் நிலை ஆளுநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சி.முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். .
61 வயதாகும் மனோஜ் சின்ஹா கடந்த 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டம், மோகன்புரா கிராமத்தில் பிறந்தவர். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தீவிரமாக பணியாற்றியவர் மனோஜ் சின்ஹா.
இந்து பனாராஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 1982-ம் ஆண்டு படித்தபோது மாணவர்கள் அமைப்பில் சேர்ந்தபோது மனோஜ் சின்ஹாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. கடந்த 1996-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சின்ஹா, 1999-ம் ஆண்டிலும் மீண்டும் தேர்வானார்.
கடந்த 1989-ம் ஆண்டிலிரு்து 1996-ம் ஆண்டுவரை பாஜகவின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக மனோஜ் சின்ஹா இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்குவந்தபோது அப்போதும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார் மனோஜ் சின்ஹா. ரயில்வே துறையின் இணையமைச்சராகவும், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு தனிப்பொறுப்பு அமைச்சராகவும் மனோஜ் சின்ஹா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்த முர்மு, மத்திய அரசின் தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கபடவாய்ப்பு உள்ளதால், அதற்காக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான செய்தியும் மத்திய அரசிடம் இருந்து வெளியாகவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு பிரி்க்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக ஜி.சி.முர்மு நியமிக்கப்பட்டார்.
கடந்த 1985-ம் ஆண்டு குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஜி.சி.முர்மு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும், அமித் ஷா அமைச்சராக இருந்தபோதும் அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றியவர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் மத்திய பணிக்கு அழைக்கப்பட்ட முர்மு, மத்திய அரசின் செலவினத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரி்க்கப்பட்டபின் அங்கு முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்
மத்திய அரசின் தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ராஜீவ் மெஹரிஷியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அந்த பதவியில் முர்மு நியமிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக நேற்று ஸ்ரீநகரிலிருந்து டெல்லி முர்மு புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், இன்று டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளை இன்று சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக மத்திய அரசுடன், ஜி.சி.முர்மு லேசான உரசல் போக்குடன் செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி நெட்வொர்க்கை கொண்டு வர வேண்டும் என்று முர்மு விரும்பினார். ஆனால் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உரசல் எழுந்தது.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்துடனும் ஜி.சி.முர்மு மோதலில் ஈடுபட்டார். அப்போது யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது இதில் துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டுக்குள் வராது என்று தேர்தல் ஆணையமும் கண்டிப்புடன் கூறி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT