Published : 05 Aug 2020 03:50 PM
Last Updated : 05 Aug 2020 03:50 PM
ராமஜென்மபூமியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையை பிரதமர் நடத்தி அடிக்கல் நாட்டுதலும் இனிதே முடிந்த நிலையில் கோயில் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்விக்கு ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் பதிலளித்தார்.
“மக்கள் எங்களிடம் எப்போது கோயில் கட்டிமுடிக்கப்படும் என்று கேட்பதுண்டு. அப்போது மத்தியில் மோடி இருக்கிறார், மாநிலத்தில் யோகி இருக்கிறார், இப்போது கட்டாவிட்டால் வேறு எப்போது கட்ட முடியும் என்று பதில் சொல்வோம்.
இப்போது மக்கள் மகா ராமர் கோயிலைக் கட்டி முடிக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் வழங்கி ஈடுபட வேண்டும்.
உலகில் வாழும் ஒவ்வொரு இந்துவின் ஆசையும் இதுதான். கோயில் கட்டுவது புதிய இந்தியாவை கட்டமைப்பதாகும், எனவே விரைவில் முடிக்க வேண்டும்.
அறக்கட்டளையின் லட்சியம் மூன்றரை ஆண்டுகளுக்குள் ராமர் கோயிலை எழுப்பி விட வேண்டும் என்பதே..
ராமர் கோயில் அறக்கட்டளை இதற்காக எல் அண்ட் டி நிறுவனத்தை கட்டுமான ஒப்பந்தத்தில் அமர்த்தியுள்ளது. கோயிலின் தரை தளம் முதல் ஒன்றரை ஆண்டுகளில் முடிந்து விடும், பிற பகுதிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
இப்படியாக மூன்றரை ஆண்டுகள் கால நேரம் எடுத்துக் கொள்ள அறக்கட்டளை முடிவு எடுத்துள்ளது” என்று அவர் பேசினார்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோஹன் பாக்வத் பேசும் போது, “ஆகஸ்ட் 5ம் தேதி புதிய இந்தியாவை அடையாளப்படுத்துகிறது. உலகமே ஒரு பெரிய குடும்பம் எனப்படும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். அனைவரையும் உடன் அழைத்துச் செல்வதில்தான் எங்கள் நம்பிக்கை உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT