Published : 05 Aug 2020 08:04 AM
Last Updated : 05 Aug 2020 08:04 AM
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
டெல்லி அருகே குர்கவானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தர்மேந்திர பிரதான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் கரோனாவில் பாதிக்கப்படும் 2-வது அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆவார். ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்ைசயில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் “ எனக்கு கரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நான் கரோனா பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் நலமுடன் இருக்கிறேன். இருப்பினும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் புதன்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமித் ஷா பங்கேற்றிருந்தார். இந்த கூட்டத்துக்கு அடுத்த சில நாட்களில்தான் அமித் ஷா கரோனாவில் பாதிக்கப்பட்டார். தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கரோனா பரிசோதனை செய்யுமாறு அமித் ஷா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மத்திய அமைச்சர்கள் இருவருக்கு கரோனா இருப்பதுஉறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து அமைச்சர்களும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் ஷெகாவத் கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னை தனிமப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் பங்கேற்கவில்லை என்றாலும், கூட்டம் முடிந்தபின் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரநாத் சிங், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT