Published : 21 May 2014 11:49 AM
Last Updated : 21 May 2014 11:49 AM
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய இருவரின் மரண தண்டனையை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கொல்கத்தாவில் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள அமெ ரிக்க மையம் மீது, 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் இருவர் ஏகே - 47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இச்சம் பவத்தில், 4 போலீஸார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் நடைபெற்ற நான்கு நாள்களுக்குள் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில், சலீம், ஜாஹித் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் கொடுத்த மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில், அஃப்தாப் அகமது அன்சாரி துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவர் ஆசிஃப் ரஸா கமாண்டோ படை(ஏ.ஆர்.சி.எஃப்) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதில், அஃப்தாப் அகமது அன்சாரி, ஜமாலுதீன் நாசிர் உட்பட 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இருவர் விடுவிக்கப்பட்டனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டில், அன்சாரி, நாசிருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களின் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன் றத்தில் அன்சாரி மற்றும் நாசிர் மேல்முறையீடுசெய்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நீதிபதிக ள் ஏ.கே.பட்னாயக், இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை வழங்கியது. அன்சாரி, நாசிர் இருவரது மரண தண்டனைக்கு இப்போது அவசியம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அன்சாரி வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். நாசிர், தண்டனைக் குறைப்பின்றி, 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT