Published : 03 Aug 2020 09:52 AM
Last Updated : 03 Aug 2020 09:52 AM
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் 2-ம், 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை இந்தியாவில் நடத்த செரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) நேற்று அனுமதி அளித்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலிடத்தில் இருப்பது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்ஸா நிறுவனமாகும். இவை இரண்டும் சேர்ந்து கரோனாவுக்கு எதிராக “கோவிஷீல்ட்” எனும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன.
இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை மிகப்பெரிய மருந்து நிறுவனமான செரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) பெற்றுள்ளது.
தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்திப் பரிசோதிக்கும் கிளினிக்கல் பரிசோதனையின் 2-வது மற்றும் 3-வது கட்டம் பிரிட்டனில் நடந்து வருகிறது. பிரேசிலில் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையும், தென் ஆப்பிரிக்காவில் முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் மனிதர்கள் மீது 2-ம் மற்றும் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை நடத்த செரம் நிறுவனம் டிசிஜிஐ அமைப்பிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் நேற்று இரவு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.
கரோனா வைரஸுக்கான வல்லுநர்கள் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஒப்புதலை டிசிஜிஐ இயக்குநர் மருத்துவர் வி.ஜி சோமானி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து டிசிஜிஐ அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், “மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் விவரங்களைத் தீவிரமாக ஆய்வு செய்தது.
ஏற்கெனவே மனிதர்கள் மீதான முதல், 2-ம் கட்ட பரிசோதனை விவரங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் தீவிரமாகப் பரிசீலித்தது. அதன்பின்புதான் 2-ம் மற்றும் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை இந்தியாவில் நடத்த அனுமதியளிக்கப்பட்டது. இனிமேல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்ட் மருந்தை ஆரோக்கியமான மனிதர்களுக்குப் பரிசோதிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேரிடம் 17 நகரங்களில் கோவிஷீல்ட் மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. குறிப்பாக டெல்லி எய்ம்ஸ், புனே பிஜே மருத்துவக் கல்லூரி, பாட்னா ராஜேந்திரா நினைவு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம், ஜோத்பூர் எய்ம்ஸ், கோரக்பூர் நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினம் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூர் ஜேஎஸ்எஸ் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT