வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சர்வதேச விமானப் போக்குவரத்தை கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது. அதன்பின் சர்வதேச அளவில் வர்த்தகரீதியான பயணிகள் விமானப் போக்குவரத்தை அரசு தொடங்க அனுமதிக்கவில்லை.
அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் மிஷனை மத்திய அரசு கடந்த மேம 7-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.
இதுவரை 4 கட்ட வந்தே பாரத் மிஷன் முடிந்துள்ளன. 8.80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். 5-வது வந்தே பாரத் மிஷன் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் வந்தே பாரத் மிஷன் தவிர்த்து, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து மத்திய அரசு பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போக்குவரத்து என்பது கட்டுப்பாடுகளுடன், விதிமுறையைப் பின்பற்றி வர்த்தக ரீதியற்றதாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன் விவரம்:
அனைத்துப் பயணிகளும் இந்தியாவுக்குப் புறப்படும் முன் 72 மணி நேரத்துக்கு முன்பாக, சுயவிவரக் குறிப்பு விண்ணப்பத்தை (newdelhiairport.in) என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 7 நாட்கள் பணம் செலுத்தித் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியும், அந்த 7 நாட்களில் நடத்தப்படும் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லாவிட்டால், வீட்டில் சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு உடல் நிலையைத் தாங்களே கண்காணித்துக் கொள்ளுதல் வேண்டும்.
கர்ப்பிணிப்பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நேர்தலால் வருவோர், முதியோர், தீவிரமான உடல்நலப் பிரச்சினை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களில் வருவோர் மட்டுமே வீட்டில் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் விதிவிலக்கு கோரும் பட்டியலில் இருப்போர் 72 மணிநேரத்துக்கு முன்பே, சுயவிவரம் தாக்கல் செய்யும்போது அதைக் குறிப்பிட வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்.
பயணிகள் இந்தியா வந்தபின் பணம் செலுத்தி ஹோட்டலில் தங்கி தனிமைப்படுத்திக் கொள்வதில் விதிவிலக்கு கோரமுடியும். ஆனால், அவர்கள் பயணம் செய்வதற்கு 96 மணிநேரத்துக்கு முன் பிசிஆர் பரிசோதனை செய்து கரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழைப் பயணத்துக்கு 72 மணிநேரத்துக்கு முன் தாக்கல் செய்யும் சுயவிவரக் குறிப்பில் இணைத்திருக்க வேண்டும். அந்த அறிக்கை உண்மைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். பொய்யானதாக இருந்தால், அது கிரிமினல் குற்றமாகக் கருதி சம்பந்தப்பட்ட பயணி மீது நடவடிக்கை பாயும்.
அறிவுரைகள்…
பயணிகள் விமானத்தில் ஏறும்போது டிக்கெட்டுடன் சேர்த்து செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்த கையேடு தரப்படும்.
விமானத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
விமானம் அல்லது கப்பலில் புறப்படும் முன் பயணிகளுக்கு தெர்மல் பரிசோதனை நடத்தப்படும்போது கரோனா அறிகுறியில்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
நில எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கும் இதே வழிமுறை பின்பற்றப்படும்.
விமான நிலையத்தில் சானிடைசிங் வசதி, கிருமிநாசினி தெளித்தல் போன்றவை உறுதி செய்யப்படும்.
பயணிகள் விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும்.
ஆன்லைனில் சுயவிவரக் குறிப்பை தாக்கல் செய்ய முடியாத பயணிகளுக்கு விமான நிலையத்தில் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.
விமான நிலையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகள் குறித்து பயணிகளுக்கு முறைப்படி அறிவிக்கப்படும்.
விமானத்தில் அல்லது கப்பலில் பயணிக்கும்போது பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். விமானத்தில் பயணிகளுக்குத் தேவைப்பட்டால் அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்படும்.
இந்திய நகரங்களில் விமானத்தில் வந்து இறங்கும்போது, பயணிகள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.
விமானப் பயணம் புறப்படுவதற்கு முன் நிரப்பிய சுயவிவரக் குறிப்பின் நகலை, விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் அல்லது ஆன்லைனில் பதிவிட்டிருந்தால் அதைக் காண்பிக்கலாம்.
பயணிகள் பரிசோதிக்கப்படும்போது கரோன் அறிகுறிகள் இருந்தால் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தெர்மல் ஸ்கேனிங் முடிந்தபின், பணம் செலுத்தி தனிமை முகாமுக்குச் செல்வதில் இருந்து விலக்கு பெற்ற பயணிகள் மட்டும் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளிடம் சுய விவரங்கள், ஊர், மாவட்டம், செல்போன் எண், முகவரி ஆகியவற்றைத் தெரிவித்து வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
WRITE A COMMENT