Last Updated : 02 Aug, 2020 02:12 PM

2  

Published : 02 Aug 2020 02:12 PM
Last Updated : 02 Aug 2020 02:12 PM

அயோத்தி பூமி பூஜைக்கு முதல் நாள் அனுமனுக்கு சிறப்புப் பாராயணம்; காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தனது இல்லத்தில் நடத்துகிறார்

மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்.

போபால்

அயோத்தியில் வரும் புதன்கிழமை ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாள் மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத் தனது வீட்டில் கடவுள் அனுமன் குறித்த பாராயணத்தை நடத்துகிறார்.

அயோத்தியில் வரும் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் போபால் நகரில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கடவுள் அனுமன் புகழ் பாடும் பாராயணம் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தூ நிருபர்களிடம் கூறுகையில், “ மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வரும் 4-ம் தேதி போபால் நகரில் உள்ள அவரின் நேதாஜி இல்லத்தில் கடவுள் அனுமன் குறித்த பாராயணத்தை நடத்துகிறார். சமூக விலகலைக் கடைப்பிடித்து, அனைத்து சுகாதார விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

அனுமனின் தீவிர பக்தரான கமல்நாத், முக்கியமான விஷேச நாட்களில் இதுபோன்று பாராயணம் நடத்துவார். இதில் எந்தவிதமான அரசியல் கலப்பும் இல்லை. தீவிர அனுமர் பக்தர் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு கமல்நாத் ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்கள் அனைவரும் வீட்டில் அனுமன் பாராயணம் படிக்க கமல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை குறித்துப் பேசிய கமல்நாத், “ஒவ்வொரு குடிமகனின் சம்மதத்துடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் அனுமன் ஜெயந்தி திருநாள் வந்தபோது, கரோனா வைரஸ் காரணமாக சிறப்பான முறையில் அனுமன் ஜெயந்தியை கமல்நாத் கொண்டாடவில்லை. மேலும், அப்போதுதான் ஆட்சியைப் பறிகொடுத்து கமல்நாத் முதல்வர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர அனுமன் பக்தரான கமல்நாத், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது தொகுதியில் அமைந்திருக்கும் சிந்த்வாரா மாவட்டத்தில் 101 அடி அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x