Published : 02 Aug 2020 12:46 PM
Last Updated : 02 Aug 2020 12:46 PM
நாட்டில் வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், பிரதமர் மோடியை ராஜினாமா செய்யக்கோரி மக்கள் கேட்கும்நிலை வரலாம். இஸ்ரேலில் மக்கள் போராட்டம் நடத்துவதுபோல் இங்கு நடக்கலாம் என்று மத்திய அரசுக்கு சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வமான நாளோடானா சாம்னாவில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கரோனாவில் ஏற்பட்ட வேலையின்மை பிரச்சினைகளை தீர்க்க்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பிரதமருக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்டுரையில் சஞ்சய் ராவத் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் 10 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 40 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது மத்திய அரசு?
மாத ஊதியம் பெறும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளார்கள். தொழில், வர்த்தகத்துறையின் கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து வீட்டில் இருக்கிறார்கள்.
சமூதாயத்தில் பணவீக்கம், வேலையின்மை, வறுமை அதிகரித்து வருகிறது. போர்க்களத்தில் தலைவராக இருப்பதைவிட, பொருளாதாரத்துக்கு தலைவராக இருப்பதுதான் முக்கியம்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடக்க வேண்டும், ராஜஸ்தானும் பாஜகவுக்கு தேவை.அதுவும் நடக்கப் போகிறது. ரஃபேல் போர்விமானங்கள் வர வேண்டியிருந்தது அதுவும் வந்துவிட்டது.
ரஃபேல் போர்விமானங்கள் அம்பாலா தளத்துக்கு வரும் முன் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. ஆனால், ரஃபேல் விமானம் வருவதற்கு முன் சுகோய், மிக் ரக விமானங்கள்வெளிநாடுகளில் இருந்து இந்திய அ ரசு வாங்கியபோது இதுபோன்ற கொண்டாடங்கள் இல்லையே.
ரஃபேல் போர் விமானங்களால் குண்டுகள் வீசிவும், ஏவுகணை வீசவும்தான் முடியும். நாட்டில் உள்ள வேலையின்சிக்கல், பொருளாதார பிரச்சினைகளை அழிக்க முடியாது.
மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது. மத்தியஅரசின் வாக்குறுதிகளாலும், நம்பிக்கைனாலும் மட்டும் அவர்களால் வாழ முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக மக்களின் முக்கியமான எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.
கடவுள் ராமரின் வனவாசம்கூட ஒருகட்டத்தில் முடித்திருக்கிறது தற்போதைய நிலைமை கடினம் என்பதை பிரதமர் கூட ஒப்புக்கொள்வார். யாரும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை.
கரோனாவில் ஏற்பட்ட பிரச்சினைகளும், வேலையின்மை பிரச்சினைகளையும் மத்திய அரசு விரைவில் சரிசெய்யாவி்ட்டால், மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய புறப்பட்டுவிடுவார்கள்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடின்யாவு பிரதமர் மோடியின் நண்பர். இஸ்ரேலில் கரோனாவை பரவலை முறையாகக் கையாளவில்லை, பொருளாதாரச் சிக்கலை தீர்க்கவி்ல்லை எனக் கூறி மக்கள் சாலையில் இறங்கி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருவதை காண முடிகிறது.
பிரதமர் நெடின்யாகு ராஜினாமா செய்யக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோன்ற சூழல் இந்தியாவிலும் வரக்கூடும்.
ராஜஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் கெலாட் தலைமையிலான அரசை சிதைக்க மத்திய அரசு முயல்கிறது. பெரும்பாலும் அங்கு குடியரசு தலைவர்ஆட்சி வருவதற்கான சூழல் வந்துவிட்டது.
கரோனாவில் மக்கள் போராடி வரும் நிலையில் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் அனுமன் மந்திரம் சொன்னால் கரோனா அழிந்துவிடும் என்கிறார்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்கிறார். ஆனால், யாரும் வேலையின்மை பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை. பிரச்சினைகள் மூலம் வாய்பைத் தேடுங்கள் எனச் சொல்வது எளிது. ஆனால் மக்கள் கரோனாவை எதிர்த்து எவ்வாறு போராடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்கள், மூடிக்கிடக்கின்றன. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. விவசாயப் பொருட்களுக்கு விலையில்லை. எந்த பக்கம் சென்றாலும் வேதனையின் குரல் ஒலிக்கிறது. பிரதமர் மோடி அறிவித்த ரூ.20லட்சம் கோடி திட்டம் யாருக்காவது பயன்பட்டதா?
இவ்வாறு சிவசேனாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT