Published : 02 Aug 2020 09:32 AM
Last Updated : 02 Aug 2020 09:32 AM
இராக்கில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் பணிக்குச் சென்ற இந்தியர்கள் பலரும் கரோனாவால் வேலை இழந்துள்ளனர். பிழைப்புக்கு வழியில்லாமல் விடப்பட்ட அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
தங்களை தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் சாலைகளில் திரண்டு போராடி வரும் நிலையில், இராக் அரசு ராணுவத்தைக் கொண்டு அவர்களை அடக்கி வருகிறது.
அப்படி இராக்கில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த கதிரேசன் நம்மை வாட்ஸ் அப் வழியே தொடர்பு கொண்டு பதறினார்.
“இராக்கில் கர்பாலா என்ற இடத்தில் உள்ள பெட்ரோலியப் பொருள்கள் சுத்திகரிப்பு நிலையத்தில் நான் பணியில் இருக்கிறேன். இங்கு இந்தியர்கள் மட்டுமே 6 ஆயிரம் பேர் பணியில் இருக்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இதில் 2,500-க்கும் அதிகம். ஜூலை 9-ம் தேதி எங்களில் ஒருவருக்கு முதன் முதலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அப்போது முதலே எங்களை நாங்கள் வேலைசெய்த நிறுவனமும் கைவிட்டுவிட்டது. இராக் அரசும் எங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியது. நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் இதற்கென 8 பேருக்கு ஒரு அறை ஒதுக்கியுள்ளனர். எட்டுப் பேர் ஒரு அறையில் இருப்பதுதான் தனித்திருப்பதா? இங்கே சரியான கழிப்பிட வசதிகூட இல்லை. இதனாலேயே எளிதில் எங்களை நோய்தொற்றும் வாய்ப்பு இருக்கிறது. சத்தான உணவுதான் கரோனாவுக்கு மருந்து என்கிறார்கள். ஆனால், எங்களுக்கு இங்கே வழக்கமான உணவுகூட கிடைப்பதில்லை.
எங்களோடு தங்கவைப்பட்டுள்ள 6 ஆயிரம் பேரில் மேலும் பலருக்கு காய்ச்சல், சளி இருக்கிறது. ஆனால், இங்கே யாருக்குமே கரோனா பரிசோதனைக்கூட செய்யவில்லை. யாருக்காவது நிலைமை மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்டால் அவர்களை மட்டுமே சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார்கள். சளி, காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கூட இதுவரை கொடுக்கவில்லை. இப்படியே எங்களை இங்கு அடைத்து வைத்திருந்தால் எங்களது நிலைமை என்னாகும் என்றே தெரியவில்லை.
நாங்கள் இருக்கும் நிலையை இராக்கில் உள்ள இந்திய தூதரகத்துக்குத் தெரியப்படுத்தினோம். ஊதியம் இல்லாமலும், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமலும் சிரமப்படும் எங்களுக்கு விமான சேவை ஏற்படுத்திக் கொடுத்தால் எப்பாடு பட்டாவது இந்தியாவுக்குத் திரும்பிவிடுவோம் என வலியுறுத்தினோம். ஆனாலும் எங்களது வேண்டுகோளுக்கு எந்த விடிவும் பிறக்கவில்லை. இதனால் கடந்த ஒரு வார காலமாக கர்பலா சாலையில் இந்தியர்கள் போராட்டம் நடத்திவருகிறோம்.
நேற்று (ஆகஸ்ட் 1) நடந்த போராட்டத்தின்போது ராணுவத்தினர் வந்து துப்பாக்கிகளைக் காட்டி எங்களை மிரட்டினார்கள். இதுவரை எங்களோடு பணி செய்துவந்த ஐந்து பேரை கரோனாவுக்கிப் பலிகொடுத்திருக்கிறோம். மேலும் இதேநிலை நீடித்தால் கொத்துக் கொத்தாக இன்னும் பலர் மடியும் சூழல் ஏற்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வந்தவர்கள் உயிரோடு வீடுபோய் சேர்ந்தால் போதும் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டோம். உயிர்ப் பிச்சை கேட்கும் எங்களை காப்பாற்ற தமிழக அரசும் இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உருக்கமாகச் சொல்லி முடித்தார் விஜய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT