Last Updated : 02 Aug, 2020 09:06 AM

7  

Published : 02 Aug 2020 09:06 AM
Last Updated : 02 Aug 2020 09:06 AM

உங்கள் ஆட்சியை நீங்களே இழிவுபடுத்தாதீர்கள்; பாஜகவுக்குத்தான் உதவியாக அமையும்: இளம் தலைவர்களுக்கு காங். மூத்த தலைவர்கள் அறிவுரை

கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகள் ஆட்சி உங்கள் ஆட்சி. அதை நீங்களே இழிவுபடுத்தினால், பாஜகவுக்குத்தான் அது உதவியாக அமையும், மக்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பு குறைந்துவிடும் என்றும் இளம் தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் காணொலி காட்சி முறையில் நேற்றுமுன்தினம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் கபில் சிபல், ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, கே.சி. வேணுகோபால், ராஜீவ் சாதவ் உள்ளிட்ட இளம் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராஜீவ் சாதவ் உள்ளிட்ட இளம் நிர்வாகிகள், “முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த நிர்வாகத் தவறுகளே தற்போதைய காங்கிரஸின் சரிவுக்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த மற்றும் இளம் தலைவர்கள் இடையே நீண்ட நேரம் காரசார விவாதம் நடைபெற்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அதிருப்தியுடன் இருக்கும் இளம் தலைவர்களுக்கு பல்வேறு மூத்த தலைவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியை நீங்களே விமர்சித்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும், இப்போதுள்ள நிலையில் ஒற்றுமைதான் அவசியம். கடந்த கால தோல்விகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு, சித்தாந்தரீதியாக எதிரிகளின் கரங்களில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில் “ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியை கேள்விகேட்பவர்கள் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குபவர்கள். யாரும் தங்களுடைய சொந்த கட்சியின் ஆட்சியை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை நினைத்து காங்கிரஸ் பெருமைப்பட வேண்டும். எந்த கட்சியும் தங்களுடைய சொந்த ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதில்லை.

நமக்கு எந்த காலத்திலும் பாஜக கருணையுடன் நம்மை அணுகும், நற்சான்று அளிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நம்மை நாம் மதிக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில் “ கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஒருமுறைகூட வாஜ்பாயையும், அவரின் அரசையும் குறைத்துப் பேசவில்லை.

காங்கிரஸில், துரதிர்ஷ்டமானது என்னவென்றால், தவறான தகவலைப் பெற்று பாஜகவுடன் போரிடுவதற்கு பதிலாக சிலர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை தாக்குகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுக்கு உதவுகிறார்கள். இது மக்கள் மத்தியில் நமக்கான மரியாதையை குலைக்கும். இப்போதுள்ள சூழலில் ஒற்றுமை அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

மணிஷ் திவாரியின் ட்விட்டர் கருத்துக்கு பதில் அளித்துள்ள முன்னாள் எம்.பி. மிலந்த் தியோரா கூறுகையில் “ அருமையாகச் சொன்னீர்கள் மணிஷ். 2014-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து மன்மோகன் சிங் வெளியேறும் போது, வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்றார். மன்மோகன் சிங் முன்னிலையிலே, அவரின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர், தேசத்திற்கான அவரின் பல ஆண்டு சேவையை நிராகரித்து, பாரம்பரியத்தை அழிக்க முற்படுவார்கள் என்று அவர் எப்போதாவது கற்பனை செய்திருப்பாரா” எனக் கேட்டார்.

மூத்த தலைவர் சசி தரூர், மணிஷ் திவாரி, தியோர் கருத்தை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகள் ஆட்சி என்பது, தீங்கிழைக்கும் நோக்கில், உந்தப்பட்டு, சிதைக்கப்படுகிறது. நம்முைடய தோல்விகளில் இருந்து ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளோம், காங்கிரஸை மீண்டெழச்செய்ய அதிகமாக செய்ய வேண்டும். ஆனால், சித்தாந்தரீதியாக எதிரிகளின் கரங்களில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.

மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானித்ததில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி. சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் நீதியாக தேசத்தை வளர்த்துள்ளோம். மன்மோகன் சிங், சோனியா காந்தியின் தன்னலமற்ற, நேர்மையான தலைமை சாமானிய மக்களின் பிரச்சினைகள் பலவற்றை களைந்துள்ளது. இந்தியாவை உலகளவில் பெருைமபடச் செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “ பெரும்பாலானவர்கள் மாநிலங்களவையில் அதிகாரத்தையும், இடத்தையும் பிடிக்க வேர் இல்லாமல் அலைகிறார்கள். அனைவரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு, எதிரிகளிடம் வீழ்ந்துவிடாமல், மோடிக்கு எதிராக ராகுல் காந்திக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x