Published : 01 Aug 2020 09:18 AM
Last Updated : 01 Aug 2020 09:18 AM
கேரள மாநிலத்தில் 4 மாதங்களுக்குப் பின் நீண்ட தொலைவு பேருந்துகள் கரோனா தடுப்பு வழிகாட்டலுடன் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நேற்று அறிவித்த சில மணிநேரத்தில், அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்று, போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.
கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் அச்சமடைந்த அரசு, நீண்ட தொலைவு அரசுப் பேருந்துகளை இயக்கும் உத்தரவை நிறுத்தி வைத்தது. கேரள மாநிலத்தில் கரோனாவில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக கேரள அரசு சார்பில் இயக்கப்படும் நீண்ட தொலைவு பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. இந்தப் பேருந்து சேவை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இயக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக மாநில போக்குவரத்துறை அமைச்சர் ஏ.கே.சசிதரன் நேற்று காலை நிருபர்களுக்கு கோழிக்கோடு நகரில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த 4 மாதங்களாக நீண்ட தொலைவு பேருந்துகள் எதையும் இயக்கவில்லை, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்தும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 206 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படாது.
அரசுப் பேருந்தும், தனியார் பேருந்து சேவையும் குறைந்துவிட்டதால், மக்கள் வேறு வழியில்லாமல் சொந்த வாகனங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அரசுப் பேருந்தை நம்பியிருக்கும் மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். ஆனால், குறைந்த பயணிகளுடன் பேருந்தை இயக்கினால் அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது” எனத் தெரவித்திருந்தார்.
குறைவான பயணிகளுடன் பேருந்து இயக்குவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது எனக் கூறி தனியார் பேருந்து உரிமையாளர்களும் கடந்த சனிக்கிழமை முதல் பேருந்து போக்குவரத்தை நிறுத்திவிட்டனர்.
இந்தச் சூழலில் நேற்று மாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே.சசிதரன் மீண்டும் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஏராளமான தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாலும், கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாலும் அந்த முடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து நாளை முதல் இயக்கப்படும் என்று நம்புகிறோம்’’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT