Published : 01 Aug 2020 09:06 AM
Last Updated : 01 Aug 2020 09:06 AM

5 குவிமாடங்கள், கோபுரத்துடன் அயோத்தியில் 161 அடி உயரத்தில் பிரம்மாண்ட ராமர் கோயில்

அயோத்தி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த வாரிசுகள் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இந்த குடும்பத்தினர் கடந்த 15 தலைமுறைகளாக கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோமநாதர் கோயில் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 131-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கோயில்களை இந்தகுடும்பத்தினர் கட்டியுள்ளனர்.

தற்போது சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா (77) தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. சந்திரகாந்த் சோம்புராவின் 2 மகன்கள் நிகில், ஆசிஷ் ஆகியோர் தந்தையின் வழிகாட்டுதலில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஆசிஷ் சோம்புரா கூறியதாவது:

சோமநாதர் கோயிலை எனது தாத்தா பிரபாசங்கர் கட்டினார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை சந்திரகாந்த் சோம்புரா அயோத்தி ராமர் கோயிலுக்கான மாதிரியை உருவாக்கினார். அப்போது 2 மாடிகள், 212 தூண்களுடன் 141 அடி உயரத்தில் கோயிலை கட்ட தீர்மானிக்கப்பட்டது. இப்போது கோயில் வடிவமைப்பு மாற்றப்பட்டிருக்கிறது. வடமாநில கோயில் கட்டுமானக் கலையில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. மூன்று மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்படும்.

முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்படும். கருவறை, எண் கோண வடிவில் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு தலைமை ஏற்றிருக்கும் சந்திரகாந்த் சோம்புரா கூறும்போது, ‘‘எனது தாத்தா வாஸ்து சாஸ்திரம் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி வாஸ்து சாஸ்திரத்தின்படி ராமர் கோயில் கட்டப்படும்" என்று தெரிவித்தார்.

பிரம்மாண்ட ராமர் கோயிலை சுற்றி 4 சிறிய கோயில்களும் கட்டப்பட உள்ளன. சுமார் 3 முதல் மூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x