Published : 01 Aug 2020 08:23 AM
Last Updated : 01 Aug 2020 08:23 AM
பிஹாரில் வரும் அக்டோபர் –நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டாம். மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) கடிதம் எழுதியுள்ளது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆனால், பாஜகவும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து முரண்பட்டுப் பேசுகின்றன.
பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைக் காலம் நவம்பர் மாதத்தில் முடிவதால் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பேரவைத் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தற்போது தீவிரமடைந்துள்ளது. பிஹாரில் தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா வைரஸ் பரவல் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்றபின் அங்கு பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 280க்கும் மேற்பட்டோர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தச் சூழலில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் காலித், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. பிஹாரில் மட்டும் ஏறக்குறைய 16 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 280 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் மோசமான சூழலை எட்டியுள்ள நிலையில் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் இன்னும் உச்சத்தில் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது பிஹார் மாநில அரசு முழுமையாக கரோனாவிலிருந்து மக்களைக் காக்கும் நடவடிக்கையில் கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தச் சூழலில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால் கவனம் முழுமையும் தேர்தலை நோக்கி திரும்பக்கூடும்.
இப்போதுள்ள நிலையில், கரோனாவிலிருந்து மக்களைக் காப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். ஆதலால், அக்டோபர்- நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
தேர்தலை நடத்தினால் அது மக்கள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால் தேர்லை நடத்துவது முறையாகாது. கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் தேர்தல் நடத்தினால் வேண்டுமென்றே மக்களைச் சாவில் தள்ளுவது போன்றதாகும்.
பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட பருவமழை வெள்ளத்தால் ஏற்கெனவே பெரும் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் வகுத்த சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது கடினம்.
8 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் சமூக விலகலைப் பின்பற்றி பங்கேற்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரம் என்பது நீண்ட நடைமுறை, பல மாதங்களாகத் தயாராக வேண்டும், வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், அனைத்து மாநிலக் கட்சிகளும் தற்போது கரோனா விழிப்புணர்வும், பாதுகாப்பிலும் இருக்கின்றன. இந்த நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக மக்களைக் கூட்டமாகச் சந்திப்பதும், கூட்டம் நடத்துவதும் ஆபத்தானது.
காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து சிலர் பேசுகிறார்கள். ஆனால், ஏழை மக்களைத் தவிர்த்துவிட்டு எவ்வாறு பிரச்சாரம் செய்வது, அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கும்போது எவ்வாறு காணொலிப் பிரச்சாரம் சாத்தியம்?
ஆதலால், மாநிலத்தில் கரோனா சூழல் முன்னேற்றம் அடையும்போது தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். தற்போதைய சூழலில் பிஹார் மக்கள்தொகையில் மிகப்பெரிய அளவு மக்களை ஆபத்திலிருந்து காக்க தேர்தலை நடத்தாமல் ஒத்திவைப்பது அவசியம் என்று எல்ஜேபி நம்புகிறது''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT