Published : 01 Aug 2020 06:43 AM
Last Updated : 01 Aug 2020 06:43 AM
வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்று யுஜிசி வாதிட்டு வருகிறது.
இந்த பின்னணியில் சிவசேனா இளைஞர் அணி மற்றும் 31 மாணவர்கள் சார்பில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண்,சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, "மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை யுஜிசி பின்பற்றாமல் செமஸ்டர் தேர்வை நடத்த உத்தரவிட்டுள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரினார்.
யுஜிசி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அலாக் அலோக் வாதிடும்போது, "செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை என்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்களின் நலன் கருதியே தேர்வு நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
யுஜிசியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இறுதியில் நீதிபதிகள் கூறும்போது, "இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான பதிலை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT