Last Updated : 31 Jul, 2020 01:52 PM

 

Published : 31 Jul 2020 01:52 PM
Last Updated : 31 Jul 2020 01:52 PM

பொருளாதாரத்தின் அடித்தளத்தை  ‘அமைப்புசாரா’ துறை என்று ஒதுக்கி விடுகிறோம்: ராகுல் காந்தியுடனான உரையாடலில் நோபல் அறிஞர் ஆதங்கம்

ராகுல் காந்தி இந்தியப் பொருளாதாரம் குறித்து நோபல் அறிஞர், பேராசிரியர் முகமது யூனுஸுடன் வீடியோ உரையாடல் நிகழ்த்தினார். அதில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம் பற்றி விவாதித்தார்.

2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கும் கிராமீன்வங்கிக்கும் இணைந்து வழங்கப்பட்டது. பிற்பாடு இவரது சிறுகடன் திட்டம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது வேறு ஒரு விஷயமாகும்.

இந்நிலையில் ராகுல் காந்தியுடனான இந்த உரையாடலின் போது, ‘புலம்பெயர் தொழிலாளர்கள்தான் நம் நகரங்களைக் கட்டி எழுப்புகின்றனர். நம் பொருளாதாரமே அவர்களின் அடித்தளத்தின் மேல் எழுப்பப்பட்டதுதான். ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அளிக்க நாம் போதுமானவற்றைச் செய்வதில்லை, நாம் தொடர்ச்சியாக அமைப்பு சாரா துறையை ஒதுக்க முடியாது’ என்றார் ராகுல் காந்தி.

இதற்கு பதிலுரைத்த நோபல் அறிஞர் முகம்து யூனுஸ், “நிதி ஒழுங்கமைப்புகள் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பலவீனத்தை கரோனா வைரஸ் மிக மோசமாக அம்பலப்படுத்தியுள்ளது. சமூகத்தின் அடியில் இவையெல்லாம் புதையுண்டு கிடந்துள்ளன. நாம் அதற்குப் பழகிக் கொண்டு விட்டோம். ஏழை மக்கள் இருக்கின்றனர், புலம்பெயர் தொழிலாளர்கள் நகரில் இருக்கின்றனர். நகரங்களில் மறைந்திருக்கின்றனர். கரோனாவினால் அவர்கள் நகரங்களை விட்டு கிளம்ப வேண்டியதாயிற்று.

ஆகவே இந்த மக்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். பொருளாதாரம் இவர்களை அங்கீகரிப்பதில்லை. மேல்நிலை பொருளாதாரவாதிகள் இவர்கள் தொழிலை ‘இன்பார்மல் செக்டார்’அதாவது அமைப்பு சாரா துறை என்று அழைக்கின்றனர். எனவே இவர்கள் பொருளாதாரத்தின் அங்கம் அல்ல என்று வைத்திருக்கிறார்கள். பொருளாதாரம் அமைப்புசார்ந்த துறையின் மூலமே தொடங்குகிறது என்று கருதுகின்றனர். நாம் அமைப்புசார் அல்லது முறைசார் தொழில்களுடன் மும்முரமாக இருக்கிறோம்.

மேற்கத்திய பாணியைக் கடைப்பிடிக்கிறோம். நிதித்துறை, பொருளாதாரம் என்று மேற்கு நாடுகளை பின்பற்றுகிறோம். எனவேதான் இந்தியாவில் மக்களின் அதிர்வுத் திறனை நாம் மதிக்கவில்லை. இந்த மக்களிடம்தான் காரியத்தைச் செய்து முடிக்கும் திறன் அதிகம். இவர்களிடம் இருக்கும் படைப்புத் திறனை அங்கீகரித்து ஆதரிக்க வேண்டும், ஆனால் அரசு இவர்களிடமிருந்து விலகி நிற்கிறது. ஏனெனில் இது அமைப்புசாரா துறை, நாம் இதில் செய்ய ஒன்றுமில்லை என்ற சிந்தனை.

நம் ஏன் கிராமப் பொருளாதாரத்தை ஒரு இணைப் பொருளாதாரமாக, தன்னாட்சி பொருளாதாரமாக உருவாக்க முடியாது? தொழில்நுட்பமும் நமக்கு முன்பு இல்லாத வகையில் உதவிகரமாக உள்ளது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று நாம் நம் பொருளாதார மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறது. நாம் மீண்டும் அந்தப் பழைய பயங்கர உலகிற்குள் போனோமானால் அவ்வளவுதான், எனவே புவி வெப்பமடைதல் இல்லாத, செல்வம் ஓரிடத்தில் குவியாத, வேலையின்மை இல்லாத ஒரு உலகைக் கட்டமைக்க கரோனா நல் வாய்ப்பை வழங்கியுள்ளது” என்றார் முகமது யூனுஸ்.

ஏழைகளுக்கு ’சிறு கடன்’ திட்டத்திற்காக கிராமிய வங்கி என்ற ஒன்றை வங்கதேசத்தில் இவர் ஆரம்பித்தது வறுமை ஒழிப்புத் திட்டமாக பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த சிறுகடன் திட்டமே ஏழை குடும்பங்களை சுரண்டலுக்கும் மீள முடியா கடன்சுமையிலும் தள்ளியது. ஏழை மக்கள் தங்கள் உடைமைகளை இழக்க நேரிட்டது. மக்கள் கடுமையாக இதில் சிக்கி தற்கொலைகளுக்கும் இட்டுச் சென்றதாக இந்த கிராமியவங்கி திட்டம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இவருக்கு ஒருமுறை வங்கதேச கோர்ட் கைது வாரண்ட்டும் பிறப்பித்தது. 2015ம் ஆண்டு 1.51 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வங்கதேச வருவாய் அதிகாரிகள் இவருக்கு அழைப்பாணை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. ஷேக் ஹசினா ஒருமுறை இவரை ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுபவர் என்று குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x