Published : 31 Jul 2020 09:58 AM
Last Updated : 31 Jul 2020 09:58 AM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் மூலம் இதுவரை 8.78 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை விமானம் மூலம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் திட்டத்தை செயல்படுத்தியது. இதுவரை 3 கட்டத் திட்டங்கள் முடிந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது தவிர கடல்மார்க்கமாக சமுத்திர சேது திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் 3 கட்ட வந்தே பாரத் மிஷன் முடிந்து 4-வது கட்டம் நடந்துவரும் நிலையில் இதுவரை 8.78 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தேபாரத் மிஷன் செயல்படுத்தியது. ஏர் இந்தியா விமானங்கள், தனியார் விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள்.
இதுவரை 4 கட்டங்களாக வந்தே பாரத் மிஷன் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட வந்தே பாரத் மிஷன் மே 7 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது கட்டம் மே 17 முதல் 22-ம் தேதி வரையிலும் இருந்து பின்னர் ஜூன் 10-வரை நீட்டித்தது. 3-வது கட்டம் ஜூன் 11-ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதிவரை செயல்படுத்தப்பட்டது
தற்போது 4-வது கட்ட வந்தே பாரத் மிஷன்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,083 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் 849 சர்வதேச விமானங்களும்அடங்கும். ஏர் இந்தியா, இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தியாவின் 31 நகரங்களில் இருந்து 29 நாடுகளுக்கு இயக்கப்படுகின்றன.
கடந்த 29-ம் தேதிவரை வந்தேபாரத் மிஷன் மூலம் 8 லட்சத்து 78 ஆயிரத்து 921 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள், பூடான், மியான்மர், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில எல்லை வழியாக ஒருலட்சத்து 7 ஆயிரத்து 452 இந்தியர்கள் வந்துள்ளார்கள்.
5-வது கட்ட வந்தே பாரத் மிஷன் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இதில் 23 நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 792 விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதில் 692 சர்வதேச விமானங்கள், 100 உள்நாட்டு விமானங்கள் அடங்கும்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, சீனா, இஸ்ரேல், மலேசியா, கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அழைத்துவரப்பட உள்ளனர்.
நாட்டில் உள்ள 21 நகரங்களில் இருக்கும்விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு, 1.30 லட்சம் இந்தியர்கள் அழைத்துவரப் படஉள்ளனர்.
இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT