Published : 31 Jul 2020 09:05 AM
Last Updated : 31 Jul 2020 09:05 AM

கேரள தங்கக் கடத்தல் வழக்கு என்ஐஏ விசாரணை: வளையத்தில் கோழிக்கோடு விமான நிலையம்

திருவனந்தபுரம்

கேரள தங்கக் கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தனது விசாரணை வரம்புக்குள் கோழிக்கோடு விமான நிலையத்தையும் கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு 30 கிலோ தங்கம் அண்மையில் கடத்தி வரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தக் கடத்தலில் தொடர் புடையதாக, கேரள ஐ.டி. பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது கூட்டாளியான ரமீஸ் உள்ளிட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு தங்கக் கடத்தல்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, கோழிக்கோடு விமான நிலையத்தில் பல்வேறு கடத்தல்களை அவர்கள் அரங்கேற்றியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, கோழிக்கோடு விமான நிலையத்தில் இதற்கு முன்பு நடந்த தங்கக் கடத்தல் சம்பவங்கள், அதில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் கோரியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகள் சிலரையும் விசாரிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர, இந்த விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 230 கிலோ எடையிலான கடத்தல் தங்கங்களும், 2018-ம் ஆண்டு 178 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த சம்பவங்களில், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடத்தலுக்கு மூளையாக இருந்தவர்கள் கைது செய்யப்படவில்லை என என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, அந்த நபர்கள் குறித்தும் தற்போது விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x