Published : 30 Jul 2020 09:42 PM
Last Updated : 30 Jul 2020 09:42 PM

கரோனா பரவலின் மூன்றாவது கட்டம்; 21,298 பேருக்குத் தொற்று: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்

ஊரடங்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டபோது நோய்ப் பரவலின் மூன்றாவது கட்டம் தொடங்கியதாகவும் 21,298 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் இன்று 506 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது முழுமையான இன்றைய கணக்கு அல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தில் சில பணிகள் நடைபெறுவதால் இன்று மதியம் வரை உள்ள நோயாளிகளின் கணக்கு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. மதியத்திற்குப் பின் உள்ள கணக்கு பின்னர் சேர்க்கப்படும். இன்று இரண்டு பேர் கரோனா பாதித்து மரணமடைந்தனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 77 வயதான முதியவரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியும் மரணமடைந்தனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 375 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 29 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 31 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 40 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 37 பேருக்கு நோய் பரவியுள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 83 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 70 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 59 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 55 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 42 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 39 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 34 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 32 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 29 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 28 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 22 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 6 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 4 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 3 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று 794 பேர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,163 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,056 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 21,533 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் தற்போது 1,44,636 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,34,690 பேர் வீடுகளிலும், 9,946 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,117 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சிபினாட், ஆன்டிஜென் உள்பட 7,53,485 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 5,529 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இதுதவிர சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,21,115 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 2,228 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. கேரளாவில் தற்போது 495 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

கரோனாவுடன் நாம் பயணம் செய்யத் தொடங்கி இதுவரை 6 மாதங்கள் ஆகிவிட்டன. அரசு அனைத்து வசதிகளையும் பயன்படுத்தித்தான் இந்தக் கொள்ளை நோயிலிருந்து மீள தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும். இதில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவுதான் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கமாக அமைந்தது. ஜனவரி 30-ம் தேதிதான் கேரளாவில் முதலில் நோய் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பே கேரளா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் சீனாவில் ஒருவகையான சார்ஸ் வைரஸ் பரவுகிறது எனத் தகவல் கிடைத்த உடனேயே சுகாதாரத் துறை விழிப்புடன் களத்தில் இறங்கி நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டோம். ஜனவரி 30, பிப்ரவரி 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் கட்டத்தில் 3 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து மேலும் நோய் பரவாமல் தடுத்துவிட்டோம். இத்துடன் முதல் கட்டம் முடிந்தது.

ஆனால் அதன் பின்னர் மார்ச் 8-ம் தேதி வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் மூலம் கேரளாவில் நோய்ப் பரவலின் இரண்டாவது கட்டம் தொடங்கியது. இதன்பின்னர் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்த மார்ச் 24-ம் தேதி கேரளாவில் 105 நோயாளிகள் இருந்தனர். மே 3-ம் தேதி சிகிச்சையிலிருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 95 ஆகக் குறைந்தது. இரண்டாம் கட்டம் முடிந்தபோது கேரளாவில் 496 பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 165 பேருக்கு மட்டும்தான் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியது. பின்னர் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டபோது நோய்ப் பரவலின் மூன்றாவது கட்டம் தொடங்கியது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு ஆட்கள் வரத் தொடங்கினர்.

இதுவரை 6,82,699 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 4,19,943 பேரும், வெளிநாடுகளில் இருந்து 2,62,756 பேரும் இதுவரை வந்துள்ளனர். மூன்றாவது கட்டத்தில் நேற்று வரை 21,298 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 9,099 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். 12,199 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது.

மூன்றாவது கட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் நோய்ப் பரவல் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் மிகக் குறைவுதான். கடந்த 6 மாதங்களில் நாம் நடத்திய சிறப்பான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்தான் மற்ற மாநிலங்களைப் போல நோய்ப் பரவல் அதிகரிக்காமல் போனதற்குக் காரணமாகும்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒரே நாளில் 276 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரி முழு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கு 273 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. 980 மருத்துவர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். 6,700 தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன. 50 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கேரளாவில் 29 கரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் 8,715 படுக்கைகளும், 25 மற்ற அரசு மருத்துவமனைகளில் 984 படுக்கைகளும், 103 முதல்நிலை மருத்துவ மையங்களில் 14 ,894 படுக்கைகளும், 19 தனியார் மருத்துவமனைகளில் 943 படுக்கைகளும் உட்பட மொத்தம் 176 மருத்துவமனைகளில் 25,536 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தாலும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான வசதிகள் கேரளாவில் உள்ளன. ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கடலில் மீன் பிடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும். எந்தப் பகுதியிலிருந்து மீனவர்கள் செல்கிறார்களோ அந்த பகுதிகளுக்குத்தான் மீன் பிடித்த பின்னர் திரும்பி வரவேண்டும். மீன்களை ஏலம் விட அனுமதி கிடையாது. அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும். மீதமாகும் மீன்களை, கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x