Published : 30 Jul 2020 08:35 PM
Last Updated : 30 Jul 2020 08:35 PM
தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமையாக்குதல், நில வங்கி இணையதள மென் வெளியீடு, முதலீடுகளுக்கு ஒற்றைச் சாளர அனுமதி போன்ற அம்சங்கள் குறித்து, மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ.-யின், சுயசார்பு இந்தியாவை அடைய தொழில் தொடங்குவதை எளிதாக்குவது குறித்த, தேசிய டிஜிட்டல் மாநாட்டை இன்று தொடங்கி வைத்துப் பேசிய மத்திய அமைச்சர், தொழில் தொடங்குவதற்கான ஒற்றைச் சாளர அனுமதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று உறுதிபட தெரிவித்தார்.
தொழில்துறையினரும், அரசாங்கமும் பங்குதாரர்கள் போன்று செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், வரி ஏய்ப்போர் மற்றும் விதிமுறைகளை மீறுவோரை அடையாளம் காண்பதில், தொழில் துறையினர் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி, முக்கியப் பங்காற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
கோவிட் பாதிப்பு நிலவரம் குறித்துப் பேசிய அமைச்சர், நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதாகவும், கட்டுப்பாடுகள் தற்காலிகமானது தான் என்றும், அவை தற்போது தளர்த்தப்பட்டு வருவதாகவும் கூறினார். கோவிட் பிரச்சினை காலகட்டத்தில், நாட்டின் சேவைத்துறைகள், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இருந்த அளவில் 88 சதவீத அளவிற்கு உள்ள நிலையில், இறக்குமதிகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த அளவில் 75 சதவீத அளவிற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “பொருளாதாரம் மீண்டெழுந்து வருகிறது,” என்று கூறிய அவர், உயிர்காக்கும் வென்டிலேட்டர்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விரைவில் அகற்றப்படும் என்றார்.
தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமையாக்குதல், நில வங்கி இணையதள மென் வெளியீடு, முதலீடுகளுக்கு ஒற்றைச் சாளர அனுமதி போன்ற அம்சங்கள் குறித்து, மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி வணிகம் செய்யும் திட்டத்திற்கு சலுகைகள் அளிப்பது பற்றிக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அரசு விரும்புவதாகவும், ஏற்றுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். “சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி வணிகம் செய்யும் திட்டம் எங்கும் போய்விடாது. இது பணம் கொழிக்கும் விவகாரம். எத்தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இத்திட்டத்திற்கு விரைந்து தீர்வு கான முயற்சித்து வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதற்கான வழிமுறைகளை நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாகக் கூறிய அமைச்சர், போதுமான பணப்புழக்கம் உள்ளதாக வங்கிகள் அரசுக்கு உறுதியளித்துள்ளன எனவும் தெரிவித்தார். சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய 20 தொழில் பிரிவுகளை மத்திய வர்த்தக தொழில்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு சட்டப் பிரிவுகளை குற்றமற்ற சட்டமாக்கி வருவதுடன், தேவையற்ற சட்டங்களை நீக்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT