Last Updated : 30 Jul, 2020 05:58 PM

 

Published : 30 Jul 2020 05:58 PM
Last Updated : 30 Jul 2020 05:58 PM

சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை; 20 ஆண்டு ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு: இன்றே சரணடைய உத்தரவு

சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி : கோப்புப்படம்

புதுடெல்லி

கடந்த 2000-ம் ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி (வயது 78) உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

2000-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தெஹல்கா செய்தி நிறுவனம் ‘ஆப்ரேஷன் வெஸ்டென்ட்’ என்ற தலைப்பில் ஒரு ஸ்டிங் ஆப்ரேஷனை நடத்தியது.

அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தெர்மல் இமேஜர்ஸ் வாங்குவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஆர்டர்களைப் பெறுவதற்காக ரூ.2 லட்சம் பணம் லஞ்சமாக சமதா கட்சியின் அப்போதைய தலைவர் ஜெயா ஜேட்லியிடம் மேத்யூ சாமுவேல் என்பவர் வழங்கினார் என்ற உண்மை ஸ்டிங் ஆப்ரேஷனில் வெளியானது. மேத்யூ சாமுவேல் எந்த நிறுவனத்தையும் நடத்தாத நிலையில், ஸ்டிங் ஆப்ரேஷனில் பங்கேற்றார்.

இந்தச் சம்பவத்தை தெஹல்கா செய்தி நிறுவனம் வெளியிட்டபோது நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் வீட்டில் ஜெயா ஜேட்லி வாழ்ந்து வந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொடங்கிய சமதா கட்சியின் தலைவராக இருந்து வந்த ஜெயா ஜேட்லி தனது பதவியிலிருந்து 2002-ம் ஆண்டு விலகினார்.

இந்த ஊழல் வழக்குத் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் முக்கியக் குற்றவாளிகளாக சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி, சமதா கட்சியின் மூத்த தலைவர் கோபால் பச்சேர்வால், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் எஸ்.பி. முர்கய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்தப் பாதுகாப்பு ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்து முடிந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் சிபிஐ சிறப்பு நீதிபதி விரேந்திர பாட் இன்று தீர்ப்பளித்தார்.

அவர் அளித்த தீர்ப்பில், “பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக வெஸ்டெண்ட் இன்டர்நேஷனல் என்ற கற்பனை நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மேத்யூ சாமுவேலிடமிருந்து ரூ.2 லட்சம் சட்டவிரோதமாகப் பெற்றதை ஜெயா ஜேட்லி விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆதலால் ஊழல், குற்றச் சதி செய்தது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஜெயா ஜேட்லி, கோபால் பச்சேர்வால், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் எஸ்.பி. முர்கய் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் அபராதமும் விதிக்கிறேன். இவர்கள் 3 பேரும் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x