Published : 30 Jul 2020 05:20 PM
Last Updated : 30 Jul 2020 05:20 PM
பள்ளிக்கூடத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட் பட்டப்படிப்பு முடித்திருப்பது அவசியம் என்றும் 2030-ம் ஆண்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், தரமற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அதன்பின் கடந்த 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்துள்ளது.
இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி குறித்துப் பல்வேறு சீர்திருத்தங்கள், புதிய முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இருப்பினும் ஆசிரியர்களுக்கான தரம் உயர்த்தும் நடவடிக்கைகளும், ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைத் தகுதி, அவர்களுக்கான பயிற்சி குறித்த செயல்திட்டம் தரப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''வரும் 2030-ம் ஆண்டுக்குள் பள்ளிகளில் கற்பித்தலுக்கு ஆசிரியர்களுக்கு பட்டப்படிப்புடன் கூடிய பிஎட் படிப்பு குறைந்தபட்சத் தகுதியாக உறுதியாக்கப்படும். தரமற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
என்சிஇஆர்டி, எஸ்சிஇஆர்டி, அனைத்து மாநிலங்கள், மண்டலங்கள் அளவில் கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுடன் ஆலோசித்து, 2022-ம் ஆண்டுக்குள் ஆசியர் கல்விக்கான தேசிய கவுன்சில் உருவாக்கப்படும்.
பல்வேறு படிநிலைகளில் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படும் அனுபவத் திறன், அந்தந்த நிலைக்கு தகுந்தாற்போல் தேவையான திறன் ஆகியவை குறித்து தரம் ஆய்வு செய்யப்படும். இந்த அடிப்படையில்தான் ஆசியர்களின் தொழில் மேம்பாடு, பதவிக் காலம், தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகள், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அங்கீகாரங்களை மாநில அரசுகள் தீர்மானிக்கும்.
2030-ம் ஆண்டில் ஆசிரியர்களின் தொழில் தரம் மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தப்படும். அதன்பின் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இது செயல்படுத்தப்படும்.
பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரி ஆசிரியர்களுக்கு தொழில்ரீதியாக நீண்டகாலம் மற்றும் குறுகிய காலத்தில் பயிற்சி, ஆலோசனைகள் அளிக்கும் வகையில், திறன்வாய்ந்த திறமையை ஓய்வுபெற்ற முன்னாள் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும். இந்தக் குழுவுக்கு தேசிய கற்பித்தல் குழு என்று பெயரிடப்படும்.
புதிய கல்விக் கொள்கையின் படி, ஆசிரியர்கள் வலுவான, வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி அடிப்படையிலும், செயல்திறன் மதிப்பீடு, முன்னேற்ற வழிமுறைகளின்படியும் , பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT