Published : 30 Jul 2020 04:03 PM
Last Updated : 30 Jul 2020 04:03 PM
டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக அரசு இல்லத்தில் குடியிருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வீட்டைக் காலி செய்தார்.
ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று பிரிங்கா காந்தி வெளிேயறினார். இந்த வீடு பாஜக எம்.பி.யும் ஊடகப்பிரிவுத் தலைவருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
கடந்த 1-ம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில் “ எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.
ஆதலால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும்'' தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டைக் காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். டெல்லியில் தங்கிக்கொள்ள குருகிராமில் செக்டர் 42 பகுதியில் தனியாக வீடு ஒன்றைத் தற்காலிகமாக பிரியங்கா காந்தி வாடகைக்கு எடுத்திருந்தார்.
அந்த வீட்டில் பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்தீவிரமாக நடந்து வந்தன. அந்தப்பணிகள் முடிந்த நிலையில் பொருட்கள் அனைத்தும் அங்கு மாற்றப்பட்டு இன்று தான் 23 ஆண்டுகளாக தங்கியிருந்த வீட்டிலிருந்து பிரியங்கா காந்தி வெளியேறினார்.
பிரியங்கா காந்தி வெளியேறினாலும், அவர் தங்கியிருந்த வீட்டில் இன்னும் சில நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து அங்கு முழுநேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் பிரியங்கா காந்தி, லக்னோ நகரில் கவுல் நிவாஸ் எனும் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களில் உத்தரப்பிரதேசத்தில் முழுநேரத்தையும் பிரியங்கா காந்தி செலவிடப்போகவதாக அவரின்நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லம், அவருக்குப் பின் பாஜக தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியது.
இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்குப் புதிதாக குடியேற இருக்கும் பாஜக எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார்.
அவரின் அலுவலகத்துக்கும் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அனில் பலூனியிடம் இருந்து எந்தத் தகவலும் பிரியங்கா காந்திக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT