Published : 16 Sep 2015 08:33 AM
Last Updated : 16 Sep 2015 08:33 AM
டெல்லியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்த தொண்டு நிறுவனத்துக்கு மாநகராட்சிகள் ரூ.30 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளன. இதுதவிர பொது மக்களின் உதவியும் இல்லாத தால் பழமையான அந்த நிறு வனம் இழுத்து மூடும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நாய், குதிரை, பூனை, கழுதை போன்ற வீட்டு விலங்குகளை காப்பதற்காக, கடந்த 1979-ம் ஆண்டு ராணுவக் குடியிருப்பு பகுதியில் ‘பிரண்டி கோஸ் (FRIENDICOS)’ என்ற தொண்டு நிறுவனம் தொடங்கப் பட்டது. இதனிடையே டெல்லியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியதால், டெல்லியின் 3 நகராட்சிகள் சார்பில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் இந்நிறுவனம் ஈடுபடத் தொடங்கியது.
கருத்தடைக்காக மாநராட்சிகள் அளிக்கும் கட்டணம் மற்றும் பொது மக்களின் நன்கொடை மூலம் இத்தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சிகள் அளிக்க வேண்டிய கருத்தடை கட்டண பாக்கி தற் போது ரூ.30 லட்சமாக உயர்ந்துள் ளது. மேலும் பொதுமக்களின் நன் கொடையும் குறைந்துவிட்டதால் நிதிநிலையில் ரூ.83 லட்சம் பற்றாக் குறை ஏற்பட்டு அந்நிறுவனம் இழுத்துமூடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் நன்கொடை கோரியுள்ளது.
இதுகுறித்து இத்தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் மாண்டி சேத் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தெரு நாய்களுக்கு நாங்கள் செய்யும் கருத்தடையால் அதன் இனப்பெருக்கம் கட்டுக் கடங்கி இருப்பதுடன் அவை ஆரோக்கியமாகவும் உள்ளன.
இந்நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசியும் நாங்கள் செலுத்தி விடுவதால் அவற்றால் ஆபத்தும் வருவதில்லை. நாங்கள் செய்து வரும் இந்த பாதுகாப்பு பணியில் பாதியளவு கூட மாநகராட்சிகள் அக்கறை காட்டுவதில்லை. எங்களுக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை இவை உரிய நேரத்தில் அளிக்கத் தவறியதால் எங்கள் நிறுவனம் மூடும் நிலைக்கு வந்துள்ளது” என்றார்.
டெல்லியின் 3 மாநராட்சிகளில் கிழக்கு மாநகராட்சி மட்டும் மிக அதிகமாக ரூ.23 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளது.
இத்துடன் கருத்தடை சேவைக் கட்டணத்தை ரூ.445-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்துவதற்கு சம்மதம் தெரிவித்த பின்பும் பழைய கட்டணத்தையே மாநகராட்சிகள் அளித்து வருவ தாக தொண்டு நிறுவனம் புகார் கூறுகிறது.
டெல்லி மட்டுமின்றி அதன் அருகில் உள்ள, ஹரியாணா மாநிலத்தின் குர்காவ்ன் நகரிலும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பணியில் பிரண்டிகோஸ் ஈடுபட்டுள்ளது. இத்துடன் கைவிடப்பட்ட வீட்டு விலங்குகளுக்கும் இந்நிறுவனம் புகலிடம் அளித்து வருகிறது. தற்போது இந்நிறுவனத்தால் சுமார் 2000 வீட்டு விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. நான்கு இடங்களில் கிளைகளை அமைத்தும் இந்நிறுவனம் சேவையாற்றி வருகிறது.
டெல்லியில் தெருநாய்களின் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்ததால் பச்சிளங் குழந்தைகள் உட்பட பலர் பலியாகி உள்ளனர்.
தெருநாய் கடிக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து தட்டுப் பாடும் டெல்லி அரசு மருத்துவ மனைகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் தொடர்பாக டெல்லி அரசிடம் விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT