Published : 30 Jul 2020 12:19 PM
Last Updated : 30 Jul 2020 12:19 PM
பிஹாரில் தமக்குள்ளான கருத்து வேறுபாடுகளை களையும் முயற்சியில் எதிர்கட்சிகள் இறங்கியுள்ளனர். இதனால், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகளும் லாலு பிரசாத் யாதவின் மெகா கூட்டணியில் இணைய முடிவாகி இருப்பதாகத் தெரிகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் பிஹாரில் தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி நிலவுகிறது. இதன் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரே மீண்டும் முன்னிறுத்தப்பட உள்ளார்.
இவர்களை மெகா கூட்டணியின் சார்பில் பிஹாரின் எதிர்கட்சிகள் எதிர்க்க உள்ளனர். லாலு பிரசாத் யாதவ் உருவாக்கிய இக்கூட்டணியில் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா மற்றும் முகேஷ் சஹானியின் விகாஸ் இன்ஸான் கட்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.
கால்நடை தீவன வழக்கில் சிக்கிய லாலு சிறையில் இருப்பதால் இந்தமுறை அவரது மகனான தேஜஸ்வீ யாதவ் மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்க உள்ளார். இதில், முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வீ யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
இதன் மீது மெகா கூட்டணியின் உறுப்பினர்களுடன் இதர எதிர்கட்சிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களையும் முயற்சி நடைபெறுகிறது. இதில், கம்யூனிஸ்டு கட்சிகளான சிபிஐ எம்எல், சிபிஐ மற்றும் சிபிஐஎம் ஆகியவற்றையும் மெகா கூட்டணியில் இணைக்க முடிவாகி இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கானப் பேச்சுவார்த்தைகளும் மெகா கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே துவங்கி நடைபெறுகின்றன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மெகா கூட்டணியின் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, ‘முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தவிர மற்ற அனைவரும் தேஜஸ்வீயை முதல்வர் வேட்பாளராக ஏற்கத் தயாராக உள்ளனர்.
இவரை ஏற்பதில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் பிரச்சனை இல்லை என்பதால் அவர்களை மெகா கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிபிஐ எம்எல் கட்சியிடம் பேசும் பொறுப்பை தேஜஸ்வீ ஏற்றுள்ளார்.
சிபிஐ, சிபிஅஎம் கட்சிகளிடம் காங்கிரஸ் மற்றும் உபேந்திர குஷ்வாஹும் பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின் அதிகாரபூர்மான அறிவிப்பு வெளியிடப்படும்.’ எனத் தெரிவித்தனர்.
கம்யூனிஸ்டு கட்சிகள் ஓரிரு முறை தவிர தொடர்ந்து பிஹாரில் தனித்து போட்டியிட்டு வருகின்றன. இதனால், சில தொகுதிகளில் வாக்குகள் பிரிந்து மெகா கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியுறும் நிலை ஏற்பட்டது.
இந்தவகையில், கடந்த மக்களவை தேர்தலில் பேகுசராய் தொகுதியின் சிபிஐ வேட்பாளர் கன்னைய்யா குமார் தோல்வி அடைந்திருந்தார். டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் போராட்டம் நடத்தியதால் பிரபலமான முன்னாள் மாணவரான இவரது வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இதுபோன்ற நிலை இனி நேராமல் தவிக்க மெகா கூட்டணி முயற்சித்து வருகிறது. தற்போதைய சட்டப்பேரவையில் கம்யூனிஸ்டுகளில் சிபிஐ எம்எல் கட்சிக்கு மட்டும் 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT