Published : 30 Jul 2020 09:48 AM
Last Updated : 30 Jul 2020 09:48 AM
ராஜஸ்தான் மாநிலஅரசு சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிடக் கோரி 3 முறை அமைச்சரவை அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை நிராகரித்த ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று 4-வது முறையாக அனுப்பிய கடிதத்தை ஏற்று ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட ஒப்புதல் அளித்தார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாததால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவரையும், ஆதரவு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.
இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் தொடர்ந்த வழக்கில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட 2 முறை அரசு சார்பில் கடிதம் அளித்தும் அது நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 23-ம் தேதியிலிருந்து பேரவையைக் கூட்டுவது ராஜஸ்தான் அமைச்சரவை 3 கடிதங்களை ஆளுநருக்கு அனுப்பியது. 3-வது முறையாக காங்கிரஸ் அரசு எழுதிய கடித்தில் ஜூலை 31-ம் தேதி பேரவையைக் கூட்டக் கோரியிருந்தது.
ஆனால், பேரவையை கூட்டுவதற்கு அமைச்சரவை கடிதம் கிடைத்தபின் 21 நாட்கள் அவகாசத்துக்குப்பின்புதான் கூட்ட முடியும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றால் அதற்குதனியாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திட்டவட்டமாக அறிவித்து, 2 கடிதங்களையும் திருப்பி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவைச் சந்தித்தபின், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் அமைச்சரவை கூடி செவ்வாய்கிழமை 3-வது முறையாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது.ஆனால், அந்த கடிதத்துக்கும் விளக்கம் கேட்டு, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கடித்ததை திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, நேற்று இரவு முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூடி ஆலோசித்து, 4-வது முறையாக கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், இந்த கடிதம் அனுப்பிய 2 மணிநேரத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவை கூட்டப்படும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்தது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில் “ பேரவைக் கூட்டப்படும் முன், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வாய்மொழியில் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பேரவை கூட்டப்படும்போது எம்எல்ஏக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும், பேரவை 21-நாட்கள் நோட்டீஸ்க்கு பின்புதான் கூட்டமுடியும் என ஆளுநர் திட்டவட்டமாக முதல்வர் கெலாட்டிடம் தெரிவித்துள்ளதாக” தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT