Published : 29 Jul 2020 08:53 AM
Last Updated : 29 Jul 2020 08:53 AM
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடிசைப்பகுதியில் வாழும் மக்களில் 57 சதவீதம் பேருக்கும் குடிசைவாழ் பகுதியில் வசிக்காத 16 சதவீதம் பேருக்கும் உடலில் கரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பையில் உள்ள 3 வார்டுகளில் நடத்தப்பட்ட செரோ-ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது குடிசைவாழ் பகுதியில் 57 சதவீதம் மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை மாநகராட்சி, நிதிஆயோக், டாடா ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து ஜூலை மாதம் முதல் பாதியில் 3 வார்டுகளில் மக்களிடம் செரோ-ஆய்வு நடத்தினர்.
செரோ-ஆய்வு என்பது மக்களிடம் இருந்து ரத்த மாதிரியைப் பெற்று இதில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியிருக்கிறதா என்பதை பரிசோதிக்கும் ஆய்வாகும்.
இந்த ஆய்வில் 3 வார்டுகளில் இருந்து 8,870 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் மும்பை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 57 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளது. அதாவது 57 சதவீதம் பேரும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர குடிசைப்பகுதியில் வசிக்காத 16 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியுள்ளது. இந்த ஆய்வில் பெரும்பாலானோர் அறிகுறியில்லாமல் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது ஹெர்ட் இம்யூனிட்டி(மக்கள் திரள் தடுப்பாற்றல்) பற்றி அறிந்து கொள்ள இந்த முடிவுகள் மதிப்பு மிகுந்ததாக இருக்கும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த 3 வார்டுகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆண்களைவிட பெண்களுக்கு சிறிதளவு எண்ணிக்கையில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்புசக்தி இந்த அளவு அதிகரித்தமைக்கு மக்கள் நெருக்கத்துடன் குடிசைவாழ் பகுதியில் வாழ்ந்து வருவது, ஒரே கழிவறையை பயன்படுத்துவது, குடிநீர் பயன்படுத்துவது உள்ளிட்ட பொதுவான விஷங்களை பகிர்ந்து கொள்வதால் அவர்ளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகியுள்ளது.
மந்தை நோய் தடுப்பாற்றல் உருவாகிவிட்டதா என்பதை இப்போது கணிக்க முடியாது. அதற்கு குறிப்பிட்ட அளவு மக்கள் நோய்தடுப்பாற்றல் பெறுவது அவசியம். இது 3 வார்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மட்டும் என்பதால் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த 3 வார்டுகளில் கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது மிகக்குறைவாக 0.05 முதல் 0.10 சதவீதம் மட்டுமே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 846 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,184 பேர் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT