Published : 29 Jul 2020 08:28 AM
Last Updated : 29 Jul 2020 08:28 AM
முஸ்லிம்களிலும் பலர் ராமரின் பக்தர்களாக உள்ளனர். இவர்கள் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதில், அயோத்தி தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முஸ்லிம்களும் கலந்துகொள்ள விரும்புகின்றனர். இவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் ராம பக்தர்களாக இருப்பதே இதற்குக் காரணம்.
இவர்களில் ஒருவரும், அயோத்தி மாவட்டத்தின் பைஸாபாத்வாசியுமான ஜம்ஷெட்கான் கூறும்போது, "இந்துவாக இருந்த நாங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி முஸ்லிம்கள் ஆனோம். இதுபோல, இடையில் மதம் மாறுவதால் நம் மூதாதையர்களும் முஸ்லிம் என்றாகி விடாது. எனவே, அவர்களில் ஒருவரான ராமருக்கான கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் இந்து சகோதரர்களுடன் இணைந்து நாங்களும் கலந்து கொள்வோம்" என்றார்.
இவரைப் போல மற்றொரு முஸ்லிமான சயீத் அகமது கூறும்போது, "ஐந்து வேளையும் தவறாது தொழுகை நடத்துவதுடன் நான் ஹஜ் புனித யாத்திரைக்கான கடமையையும் முடித்துள்ளேன். எனினும், முஸ்லிம் இமாம்களில் ஒருவராக ராமரை கருதுவதால் அவரது கோயில் விழாவில் தவறாமல் கலந்து கொள்வோம்" என்றார்.
இதுபோல மேலும் பல முஸ்லிம்கள் ராமர் கோயிலுக்கான செங்கற்களுடன் அயோத்திக்கு வருகை தர உள்ளனர். இவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பைஸ்கான் இடம் பெற்றுள்ளார். இவரைப் போன்ற முஸ்லிம்களின் அயோத்தி வருகைக்கு முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் எனும் அமைப்பின் தலைவரான டாக்டர் அனில் சிங் ஏற்பாடு செய்து வருகிறார்.
அயோத்தியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்து-முஸ்லிம்கள் இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இதற்காக, நாட்டின் பல இடங்களில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே மதக்கலவரங்களும் நடைபெற்றன. உச்ச நீதிமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் அதற்கு முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொடங்க உள்ள ராமர் கோயில் கட்டும் பணிக்கான விழாவில் முஸ்லிம்களும் கலந்துகொள்ள விரும்புவது வரவேற்பைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT