Published : 29 Jul 2020 07:23 AM
Last Updated : 29 Jul 2020 07:23 AM

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசியை மனிதருக்கு செலுத்தும் 3-வது கட்ட பரிசோதனைக்கு 5 இடங்கள் தேர்வு: மத்திய பயோடெக்னாலஜி துறை செயலர் தகவல்

புதுடெல்லி

உலக நாடுகள் முழுவதும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. அதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் பாதுகாப்பானது, முதல்கட்ட பரிசோதனையில் மனிதர்களிடம் இந்த தடுப்பு மருந்து சிறந்த எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியதாக ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் முதல் கட்டமாக 1,077 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. இரண்டாவது கட்டமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கரோனா தடுப்பு மருந்து கொடுத்து பரிசோதித்தனர். அவர்களை பல குழுவினராகப் பிரித்து பரிசோதனை நடத்தினர். இதில் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதை கூர்ந்து கவனித்தனர். இதன் முடிவுகளும் இம்மாத தொடக்கத்தில் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. 3-வது கட்டமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து கொடுத்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பூசி முழு வெற்றி பெற்றதும், இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உலகிலேயே அதிக தடுப்பூசிகளை தயாரிக்கும் ‘செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இதன் பங்குதாரரான அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் தேர்ந்தெடுத்துள்ளன.

இந்நிலையில், மத்திய பயோடெக்னாலஜி துறை செயலர் ரேணு ஸ்வரூப் கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய பயோடெக்னாலஜி துறையும் பங்கேற்றுள்ளது. நிதியுதவி, உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தி கொடுத்தல், மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று தருதல் போன்ற பல விஷயங்களில் இத்துறை பணியாற்றி வருகிறது. தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசியை, 3-வது கட்டமாக இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களில் பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும். அதன்பிறகு அந்த இடங்கள் 3-வது கட்ட பரிசோதனை நடத்த தயாராக இருக்கும். இந்தியாவில் மனிதர்களுக்கு இந்தத் தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னதாக, 3-வது கட்டமாக இங்கேயே பரிசோதனை செய்து தகவல்களை சேகரித்து வைத்து வேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்வாறு ரேணு ஸ்வரூப் கூறினார்.

இதற்கிடையில், கரோனாவுக்கு தடுப்பூசியை 2 மற்றும் 3-வது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்த புனேவைச் சேர்ந்த எஸ்ஐஐ ஆய்வு மையமும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.

இந்திய தடுப்பு மருந்துகள்

முன்னதாக இந்தியாவில் ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய 2 நிறுவனங்கள், கரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன. அந்த மருந்துகள் முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளும் வெற்றிபெற்றால், உள்நாட்டிலேயே கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x