Published : 27 Jul 2020 09:16 AM
Last Updated : 27 Jul 2020 09:16 AM
ராமர் கோயில் வரலாறு, ராமஜென்மபூமியின் வரலாற்று உண்மைகள் ஆகியவற்றை எதிர்காலச் சந்ததியினரும் தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சினை ஏதும் வராமல் இருக்கவும் கோயில் கட்டுமானத்தின்போது 2 ஆயிரம் அடி ஆழத்தில் 'டைம் கேப்சூல்' வைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் தெரிவித்தார்.
டைம் கேப்சூல் என்பது, தற்போதுள்ள நிகழ்வுகள், அதுகுறித்த உண்மைத் தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்கள் ஆகியவை எதிர்காலச் சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தி அதைக் குடுவைக்குள் அடைத்து, பூமிக்குள் புதைத்து வைத்தலாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடந்துள்ளது. இந்தச் சட்டப்போராட்டம் இப்போதுள்ள தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் பாடமாகும்.
ஆதலால், ராமர் கோயில் கட்டும்போது கட்டுமானத் தளத்தின் 2 ஆயிரம் அடி ஆழத்தில் கோயிலின் வரலாறு, ராமஜென்மபூமியின் உண்மைகள், புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூல் பாதுகாப்பாக வைக்கப்படும்.
எதிர்காலத்தில் ராமர் கோயில் குறித்த வரலாற்றை யாரேனும் அறிந்துகொள்ள நேர்ந்தால், ராமஜென்மபூமி குறித்த உண்மையான தகவல்களைப் பெற முடியும். எதிர்காலத்திலும் இந்தப் புனித பூமி குறித்த சர்ச்சை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர்க்கவே இந்த டைம் கேப்சூல் வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தாமிரப் பத்திரத்தில் உண்மை வரலாறு பொறிக்கப்பட்டு கோயிலின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும்.
ராமர் கோயில் கட்டுமானத்துக்காக நாட்டின் பல்வேறு முக்கிய புனித இடங்களில் இருந்து மண் சேகரித்துக் கொண்டுவரப்படும். அதேபோல ராமர் எந்தெந்த ஆற்றுக்குச் சென்றாரோ அந்த அரிதான ஆறுகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, பூமி பூஜையின்போது அபிஷேகத்துக்கு அளிக்கப்படும். இந்தப் பணியை நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்களும், கோயிலின் தன்னார்வலர்களும் செய்கின்றனர்''.
இவ்வாறு காமேஸ்வர் சவுபால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT