Published : 27 Jul 2020 08:27 AM
Last Updated : 27 Jul 2020 08:27 AM

கடந்த காலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட சத்தீஸ்கர் பள்ளிகளை கட்டிக் கொடுக்க சரணடைந்த மாவோயிஸ்ட்கள் முடிவு

ராய்ப்பூர்

சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தில் போலீஸாரிடம் சரண் அடைந்த மாவோயிஸ்ட்கள், கடந்தகாலத்தில் தங்களால் இடிக்கப்பட்ட 12 பள்ளிகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

தண்டேவாடா மாவட்டத்தின் பைர்மாகர், மலாங்கிர், கதேகல்யான் பகுதிகளில் பள்ளிகள் இவ்வாறு மீண்டும் கட்டப்படவுள்ளன. இதில் தன்டேவாடாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பன்சி மாசப்பா கிராமத்தில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி, உள்ளூர் மக்கள் மற்றும் சரணடைந்த மாவோயிஸ்ட்கள் உதவியுடன் ஒரு வாரத்துக்கு முன் தொடங்கியது.

இதுகுறித்து கிராமப் பஞ்சாயத்து தலைவர் அஜய் தெலாம்கூறும்போது, “முன்பு மாவோயிஸ்ட்களாக இருந்த இந்த கிராமவாசிகள் தங்களின் மூத்த மாவோயிஸ்ட்கள் உத்தரவின் பேரில் இங்குள்ள பள்ளியை இடித்தனர். தற்போது அந்த அமைப்பிலிருந்து விலகி குடும்பத்துடன் இணைந்த அவர்கள், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். குழந்தைகளும் பள்ளிப் படிப்புக்கு பிறகு மேற்படிப்புக்கும் வேலைக்கும் செல்ல விரும்புகின்றன” என்றார்.

கிராம மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு பள்ளிகள் கட்டும்பணி படிப்படியாக மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படையினர் தங்கள் முகாமுக்கு பள்ளிகளை தேர்வு செய்ததால், இப்பள்ளிகளை மாவோயிஸ்ட்கள் இடித்தனர். தற்போது இப்பள்ளிகளை கட்டுவதற்கு சரணடைந்த மாவோயிஸ்ட்களை கொண்டு சுயஉதவிக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறும்போது, “சரண் அடைந்த மாவோயிஸ்ட்களின் மறுவாழ்வுக்கும் அவர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைவதற்கும் இது வழிவகுக்கும். கல்வியின் முக்கியத்துவத்தை கிராம மக்கள் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது. அந்த இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல் துறை செய்யும். பஸ்தார் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் சிக்கலான பிரச்சினையை தீர்ப்பதற்கு காவல்துறையின் மென்மையான அணுகுமுறையும் அவசியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x