Published : 26 Jul 2020 01:56 PM
Last Updated : 26 Jul 2020 01:56 PM
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் கரோனா இல்லாத நாடாக மாற்றுவோம் என அனைவரும் உறுதி எடுப்போம். வெளியில் செல்லும்போது முகக்கவசத்தை எடுக்க நினைத்தால், கரோனா போர் வீரர்களின் கடினமான பணியை நினைத்துப் பாருங்கள் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 67-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
''இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாம் கொண்டாடும் சுதந்திர தினம் இந்தக் கரோனா வைரஸ் பரவல் காலத்தில் வேறுபட்டு இருக்கப் போகிறது. கரோனா வைரஸ் பரவல் இருப்பதால் சில கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகிறோம்.
தேசத்தை கரோனா இல்லாமல் மாற்றுவோம், தற்சார்பு பொருளாதார நாடாக மாற்றுவோம் என மக்கள் சுதந்திர தினத்தன்று உறுதிமொழி ஏற்க வேண்டும்.
கரோனா வைரஸால் இருக்கும் அச்சுறுத்தல் இன்னும் நமக்குக் குறைந்துவிடவில்லை என்பதால், மக்கள் இன்னும் கூடுதல் விழிப்புடன் செயல்படவேண்டும். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிதல், சமூக விலகலைப் பின்பற்றி செயல்படுதலைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிவதால் மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பதாகவும், அசவுகரியமாக இருப்பதாகவும் சிலர் நினைக்கலாம். அதனால் வெளியே செல்லும் முகக்கவசத்தை அடிக்கடி கழற்ற நேரிடலாம்.
ஆனால், அவ்வாறு முகக்கவசத்தைக் கழற்றும் முன், கரோனா போர் வீரர்களான மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவர்களின் அர்ப்பணிப்பான பணியையும் நினைத்து அதன்பின் முகக்கவசத்தைக் கழற்றுங்கள்.
கரோனாவிலிருந்து நாம் குணமடைந்துவரும் சதவீதம் உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவும், வேகமாகவும் குணமடைந்து வருகிறோம். மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது நம் நாட்டில் கரோனாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவுதான்.
கரோனாவில் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை மத்திய அரசு காப்பாற்றியுள்ளது. இருப்பினும் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வேகமாகப் பரவி வருவதால், விழிப்புடன் நாம் இருக்க வேண்டும்.
பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் இந்தக் கரோனா காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி, அதன் உற்பத்தியை அதிகப்படுத்துவது பாராட்டுக்குரியது.
கார்கில் போரில் நாம் அடைந்த வெற்றியின் 21-வது ஆண்டை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். 21 ஆண்டுகளுக்கு முன் நமது ராணுவ வீரர்கள் இதே நாளில்தான் கார்கில் போரில் வாகை சூடினார்கள்.
இந்தப் போருக்குப் பின் பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண இந்தியா முயன்றது. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் எல்லோரிடமும் பகை வைத்திருப்பது கெட்ட எண்ணம் கொண்டவர்களின் இயல்பு.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பலஆயிரக்கண்ககான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர், சமூக தொண்டு நிறுவனங்கள் போன்றவை தேவையான உதவிகளை வழங்கும்.
வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவதால் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் மக்கள் வாழ்த்துகளைக் கூறி உள்நாட்டுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT