Published : 26 Jul 2020 11:00 AM
Last Updated : 26 Jul 2020 11:00 AM
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற 21-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் கொண்டாடும் கார்கில் வெற்றி நாளில் டெல்லியில் உள்ள போர்நினைவுச் சின்னத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கடந்த 1999-ம் ஆண்டு மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர் தொடங்கி ஜூலை 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. ஆப்ரேஷன் விஜய் எனும் பெயரில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை , பாகிஸ்தான் வீரர்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்து, போரில் வெற்றி தேடித்தந்தது.
ஏறக்குறைய 3 மாதங்கள் வரை நீடித்த கார்கில் போரில் இருதரப்பிலும் பெருத்த உயிரிழப்பு ஏற்பட்டபோதிலும் பாகிஸ்தானுக்கு மோசமான சேதம் ஏற்பட்டது. இந்தியத் தரப்பில் 500-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.
கார்கில் போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியை கார்கில் வெற்றிதினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்கில் போரின் 21-வது ஆண்டு வெற்றிதினத்தையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது ராஜ்நாத் சிங்குடன், இணையமைச்சர் ஸ்ரீபாட் நாயக், பாதுாகாப்புத்துறை தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படத்தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படைத்தளபதி ஆர்.கே.எஸ். பகதூரியா, கப்பற்படைத் தளபதி கரம்பிர் சிங் ஆகியோர் சென்று மரியாதை செலுத்தினர்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறுகையில் “ கார்கில் வெற்றித் தினமான இன்றுஅனைத்து இந்தியர்களுக்கும் நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன். நமது வீரர்களின் உயிர்த்தியாகம் கார்கில் போரில் வெற்றியைப் பெற்றுத்தந்தது. வீரர்களின் துணிச்சல், தியாகம் ராணுவத்தினருக்கு எப்போதும் உற்சாகத்தைத் தரும்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT