Published : 26 Jul 2020 08:51 AM
Last Updated : 26 Jul 2020 08:51 AM

ஆந்திர நகைக்கடையில் இருந்து 19 கிலோ வெள்ளி 7 கிலோ தங்கம், ரூ.42 லட்சம் ரொக்கம் திருட்டு: கடையில் வேலை செய்த தொழிலாளி 2 மணி நேரத்தில் கைது

விஜயவாடா

ஆந்திராவில் தான் வேலை செய்யும் நகைக்கடையிலேயே ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், 19 கிலோ வெள்ளி மற்றும் ரூ.42 லட்சம் ரொக்கத்தை திருடி நாடகமாடிய தொழிலாளியை போலீஸார் 2 மணிநேரத்தில் கைது செய்தனர்.

இதுகுறித்து விஜயவாடா காவல் ஆணையர் நிவாசுலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விஜயவாடா காட்டூருவாரி வீதியில் ராஜுசிங் சரண் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார்.

கரோனா ஊரடங்கால் வியாபாரம் சரிவர நடைபெறாததால், தனக்கு சொந்தமான 19 கிலோ வெள்ளி, ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் நண்பர் மனோகர் சிங் ராத்தோருக்கு சொந்தமான 7 கிலோ தங்க நகைகள், ரூ.22 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை தனது கடையிலேயே பத்திரப்படுத்தினார். உரிமையாளர் ராஜுசிங் சரண் கடந்த வியாழக்கிழமை இரவு முழுவதும் கடையிலேயே இருந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலையில் அவர் தனது வீட்டிற்கு குளித்துவிட்டு வரச் சென்றார். கடை ஊழியர் குருசரண் சிங்கை மீண்டும்கடைக்கு அனுப்பி வைத்தார். அப்போது, கடையில் பணியாற்றும் மற்றொரு தொழிலாளி விக்ரம் குமார் லோஹார் அந்தக் கடையில் ரத்தக் காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் விழுந்து கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குருசரண் சிங், இதுகுறித்து ராஜுசிங் சரணுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக கடைக்கு விரைந்து வந்த ராஜுசிங் சரண், இச்சம்பவம் தொடர்பாக விஜயவாடா முதலாவது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், படுகாயமடைந்திருந்த விக்ரம் குமார் லோஹாரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருடு போன கடையில் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அங்கு, கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (டிவிஆர்) காணவில்லை. கடையில் இருந்த டிவியும், கம்ப்யூட்டரும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இது திட்டமிட்ட திருட்டு என போலீஸார் தீர்மானித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அக்கம்பக்கம் உள்ள சில கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், வேறு யாரும் இந்த நகைக் கடைக்கு வெளியில் இருந்து வரவில்லை என தெரியவந்தது. ஆதலால், கடைக்குள் இருந்த விக்ரம் குமார் லோஹார் மீது சந்தேகம் வந்தது. அதன் பின்னர் தங்களது பாணியில் போலீஸார் விக்ரம் குமார் லோஹாரை விசாரித்தனர். இதில், நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர், அந்த நகை மற்றும் ரொக்கத்தை போலீஸார் மீட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெறும் 2 மணி நேரத்திற்குள் மிகப்பெரிய திருட்டை கண்டுபிடித்த போலீஸ் குழுவையும் அவர் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x