Published : 25 Jul 2020 07:46 PM
Last Updated : 25 Jul 2020 07:46 PM
கர்நாடகாவில் வாழும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சாந்தராம் சித்தி பாஜக சார்பில் சட்டமேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்றத்துக்குள் நுழைவது இதுவே முதல் முறை ஆகும்.
16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் ஆட்சியின் போது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்தியாவுக்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்டனர்.
‘சித்தி’ என அழைக்கப்படும் இந்த இன குழுமத்தைச் சேர்ந்தவர்கள் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வாழ்கின்றனர். மராத்தி, கொங்கனி, கன்னடம் கலந்த மொழியைப் பேசுகின்றனர். கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அரசியல், சமூக தளத்தில் உரிய உரிமைகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் வடகன்னட மாவட்டத்தில் உள்ள எல்லாப்பூராவைச் சேர்ந்த சாந்தராம் சித்தி அந்த இன குழுமத்தின் முதல் பட்டதாரி. கடந்த 20 ஆண்டுகளாக சித்தி மக்களின் நலனுக்காக போராடி வந்தார்.
அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிர்ஸி நகரச் செயலாளராக நியமித்தது. மேலும் கடந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் தனது, ‘வனவாசி கல்யாண் ஆஷ்ரம்’ என்ற கிளை அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் அவரை நியமித்தது.
இந்நிலையில் பாஜக சார்பில் சாந்தராம் சித்திக்கு கர்நாடக சட்டமேலவை உறுப்பினர் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது.இதையடுத்து கர்நாடக மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா நேற்று சாந்தராம் சித்தியை சட்டமேலவை உறுப்பினராக நியமனம் செய்தார்.
இதுகுறித்து சாந்தராம் சித்தி கூறுகையில், ’ ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நான் முதன் முதலாக சட்டபேரவை கட்டிடத்துக்குள் நுழைவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிறப்பால் நான் சித்தி இன குழுமத்தைச் சேர்ந்தவன் என்றாலும் மனதளவில் நானும் இந்தியன் தான். சித்தி இன குழுமத்தின் பிரதிநிதி என்பதை விட, ஒட்டுமொத்த பழங்குடிகளின் பிரதிநிதி என சொல்லவே விரும்புகிறேன்.
கர்நாடகாவில் வாழும் குன்பி, ஹலக்கி ஒக்கலிகா உள்ளிட்ட மலைவாழ் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராடுவேன்’’என்றார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த வதிராஜ் கூறுகையில், ‘ சாந்தராம் சித்தி சட்டமேலவை உறுப்பினராக பொறுப்பேற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சிறந்த கரசேவகராக விளங்கிய அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
எங்கள் அமைப்பின் முயற்சிக்கு பாஜக மூலம் வெற்றி கிடைத்திருக்கிறது’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT