Published : 25 Jul 2020 05:39 PM
Last Updated : 25 Jul 2020 05:39 PM
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்திலிருந்து ஜூலை வரை 18 லட்சம் மனுக்கள் நாடுமுழுவதும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நாட்டின் முதல் மின்னனு நிர்வாக மையத்தை காணொலி மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட காலகட்டத்திலிருந்து அதாவது மார்ச் மாதம் 24-ம் தேதியிலிரு்து ஜூலை 24-ம் தேதிவரை நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 327 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 90 ஆயிரத்து 112 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
லாக்டவுன் காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 431 வழக்குகள் வந்தன. கரோனா வைரஸ் பரவல் சூழலில் நீதிமன்றம் செயல்பட்டபோதிலும்கூட இதில் 61 ஆயிரத்து 986 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
லாக்டவுன் காலத்தில் நீதி பெறுவதை இந்த காணொலி மூலம் நடத்தப்பட்ட விசாரணை தடுத்துள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை வழக்கமான நீதிமன்றத்தை காலப்போக்கில் காணொலி மூலம் நடத்தப்படும் நீதிமன்றம் நிரப்பிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இருப்பினும் ஒருபோதும் நிஜமான நீதிமன்றத்தின் இடத்தை காணொலி நீதிமன்ற விசாரணையால் நிரப்ப முடியாது.
உண்மையில் இதுபோன்ற மிகவும் அசாதாரண சூழலில்தான் மட்டும் காணொலி மூலம் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சந்திக்கும் நீதிமன்றம் செயல்படும். விரைவில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் சந்திக்கும் இயல்பு நீதிமன்ற சூழலுக்கு படிப்படியாகத் திரும்பிவிடுவோம். நீதிமன்ற இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு முன், முறைப்படி மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று செயல்படுவோம்”
இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT