Published : 25 Jul 2020 04:52 PM
Last Updated : 25 Jul 2020 04:52 PM
நாட்டைக் கொள்ளையடித்தவர்கள்தான் ரயில்வே அளித்த மானியத்தைக் கூட லாபம் என்று பேசுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் அனுப்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ரயில்வே சார்பில் இயக்கப்பட்டன.
ஆர்டிஐ ஆர்வலர் அஜெய் போஸ் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் ரயில்வே அளித்த பதிலில் கரோனா லாக்டவுன் காலத்தில் 4,615 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்களை இயக்க ரயில்வேதுறை ரூ.2,142 கோடி செலவானது. ஆனால், ரூ.429 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டரில் மத்திய அரசைச் சாடி கருத்துப் பதிவிட்டார். அதில் அவர் கூறுகையில் “ நாடுமுழுவதும் தொற்றுநோய் பரவி, மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். ஆனால். ஒரு தரப்பினர் அதில் லாபம் பார்க்கிறார்கள். இந்த மக்கள் விரோத அரசு இந்த பேரிடரிலும் லாபம் பார்க்கும் ஈட்டி, வருவாய் பார்க்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் ட்விட்டர் கருத்துக்கு மத்திய ரயில்வேதுறை அமைச்சர் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் பதிவிட்ட கருத்தில் “ நாட்டை கொள்ளையடித்தவர்கள் மட்டும்தான், மானியத்தைக்கூட லாபம் என்று பேசுகிறார்கள்.
மாநிலங்களிடம் இருந்து பெற்ற நிதியைவிட, ஷ்ராமிக் ரயில்களை இயக்க ரயில்வே துறை மிக அதிகமாக செலவிட்டுள்ளது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களின் டிக்கெட் செலவை ஏற்பேன் என்று சோனியா காந்தி உறுதியளித்திருந்தாரே அது என்னாயிற்று என்று மக்கள் கேட்கிறார்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை லாக்டவுன் நேரத்தில் ஏற்பட்டபோது, ஷ்ராமிக் ரயில்களில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் டிக்கெட் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்கும். அவர்கள் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை, காங்கிரஸ் கட்சி செலுத்தும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT