Published : 25 Jul 2020 04:23 PM
Last Updated : 25 Jul 2020 04:23 PM
இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஒரேநேரத்தில், ஒன்றுபோல கரோனா நோய்தொற்று உச்சத்தை அடையாது. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களும் பல்வேறு காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் உச்சத்தை அடைவது வேறுபடும் என்று மருத்துவ வல்லுநர் தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுச் சுகாதார மையத்தின் இயக்குநர் மருந்துவர் பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி பிடிஐ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா போன்ற பரந்த நாட்டில் கரோனா நோய் தொற்று ஒரே நேரத்தில், ஒரேமாதிரியாக உச்சத்தை அடைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தில் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், உச்சந்தொடும் காலமும் அளவும் மாறுபடும்.
டெல்லியில் ஜூலை மாத இறுதியில் அல்லது, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கரோனா நோய் தொற்று உச்சத்தைத் தொட்டு அதன்பின் சரியத் தொடங்கும். தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் உச்சத்தைத் தொடலாம். அதன்பின் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
ஏனென்றால் இந்த மாநிலங்களில் தற்போது ஏறக்குறைய ஒரேமாதிரியான அளவு கரோனா நோயாளிகள் நாள்தோறும் உருவாகின்றனர்.ஆனால், செப்டம்பர் நடுப்பகுதிக்குபின், இங்கு கரோனாவால் புதிதாக தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்காது மாறுபட்டு குறையத் தொடங்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி, கடைசியில் கரோனா வைரஸ் உச்சத்தை அடைந்து, செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
ஆனால் ஜார்க்கண்ட், பிஹார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரோனா நோய் தொற்று உச்சத்தைத் தொடுவதற்கு சில மாதங்கள் ஆகும். ஏனென்றால், இந்த மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லாதவரை கரோனா நோய் தொற்றுப் பரவல் மிகக்குறைவாகத்தான் இருந்தது.
புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்றபின்புதான் கரோனா நோய்தொற்று வீரியம் அதிகரிக்கத் தொடங்கி பரவி வருகிறது. ஆதலால் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான அடிப்படையைக் கொண்டதால், அந்த மாநிலத்தைப் பொருத்து மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாவார்கள்.
ஆதலால், இந்தியாவில் ஒரே நேரத்தில் கரோனா பரவல் உச்சத்தை அடையாது. ஆனால், பல்வேறு உச்சங்கள் இந்தியாவில் இருக்கும்.
உதாரணமாக பிஹாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லி, மும்பையிலிருந்து புறப்பட்டு அங்கு சென்றபின்புதான் திடீரென பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவினாலும் அந்த அறிகுறி தென்படுவதற்கு் 10 முதல் 14 நாட்கள் ஆகும்.
ஆதலால், மாநில அரசுகள் கடுமையான தடுப்பு நடவடிக்ைகளை தொடர்ந்து எடுத்து வந்தால்தான் பரவலைக் குறைக்க முடியும். குறிப்பாக மக்களை அடிக்கடி கைகழுவச் செய்ய அறிவுறுத்தல், முக்கவசம் அணியவைத்தல், சமூக விலகலைக் கடைபிடிக்கவைத்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் பரிசோதனை அளவை அதிகப்படுத்தி, கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைப் பிரித்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். யாரேனும் சந்தேகத்துக்குரிய வகையில் கரோனா அறிகுறி இருந்தால், யோசிக்காமல் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க உதவும் வழியாகும், பொறுப்பான குடிமகனின் செயலுமாகும்.
ஹைதராபாத் போன்ற மக்கள் அடர்த்தியான நகரங்களில் வாகனங்களில் கரோனா பரிசோதனை செய்யும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தினால், மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக பரிசோதனைக்காக குவிவதைத் தடுக்க முடியும்
இவ்வாறு மருத்துவர் மூர்த்தி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT