Published : 25 Jul 2020 03:19 PM
Last Updated : 25 Jul 2020 03:19 PM
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் சிரமத்தில் இருந்தபோது மத்திய அரசு லாபம் பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் அனுப்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ரயில்வே சார்பில் இயக்கப்பட்டன.
லாக்டவுன் காலத்தில் ஷ்ராமிக் ரயில்களை இயக்க ரயில்வே சார்பில் ரூ.2,142 கோடி செலவிடப்பட்டது. ஆனால், ரயில்வேக்கு ரூ.429 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டரில் மத்திய அரசைச் சாடி ட்விட் செய்து, ஒரு இந்தி நாளேட்டின் செய்திப் பக்கத்தையும் இணைத்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “ நாடுமுழுவதும் தொற்றுநோய் பரவி, மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். ஆனால். ஒரு தரப்பினர் அதில் லாபம் பார்க்கிறார்கள். இந்த மக்கள் விரோத அரசு பேரிடரிலும் லாபம் ஈட்டி, வருவாய் பார்க்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் , இமாச்சலப்பிரதேச அரசின் நடவடிக்கைக்கு ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேச அரசு " ஒருமாவட்டம், ஒரு பொருள்", என்ற திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையும் சிறந்த காய்கறி, பழம் போன்ற உணவுப்பொருள் குறித்து ஆய்வு நடத்தி அந்த மாவட்டத்தில் அந்த உணவுப்பொருள் தொடர்பான வேலை வாயப்பையும், சந்தைப்படுத்துதலையும், உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையையும் ஏற்படுத்துதல் திட்டமாகும்.
மத்தியஅரசின் குறு,சிறு, தொழில் திரள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த செய்தி குறித்து நாளேட்டின் பக்கத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “ இது மிகவும் சிறந்த யோசனை. சில காலங்களுக்கு முன்பே இந்த திட்டத்தை நான் பரிந்துரை செய்தேன். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முழுமையான மனமாற்றம் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT