Last Updated : 25 Jul, 2020 02:07 PM

3  

Published : 25 Jul 2020 02:07 PM
Last Updated : 25 Jul 2020 02:07 PM

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கரோனா தொற்று உறுதி

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் : கோப்புப்படம்

போபால்


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய காலத்தில் மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே இருந்தார், அவரின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யபப்படாமல் இருந்தது.

இதனால் கரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிப்பதில் பெரும் இடையூறும், சிரமங்களும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஏற்பட்டது. அதன்பின் பாஜக தலைமையின் அனுமதிபெற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் தொடக்கத்தில் கரோனா நோய் தொற்று விரைவாக அதிகரித்த நிலையில் அதன்பின் எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கையால் படிப்படியாகக் குறைந்தது.

தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 26ஆயிரமாக இருக்கிறது, 790 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் அரவிந்த்சிங் பகதூரியாவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் சிவராச் சிங் சவுகானுடன், அரவிந்த் சிங் பங்கேற்றிருந்ததால் உடனடியாக சிவராஜ் சிங்குக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அமைச்சர் அரவிந்த் சிங்குடன் சேர்ந்து, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் லால்ஜி டான் மறைவு இறுதிச்சடங்கில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து ட்விட்டரில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதிவிட்ட கருத்தில், “ கரோனா வைரஸ் அறிகுறிகள் எனக்கு இருந்தன. அதற்கான பரிசோதனை செய்தபோது கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உடனடியாக கரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

யாரும் அச்சப்படத்தேவையில்லை, நான் சிகிச்சையில் இருந்தாலும் நான் தொடர்ந்து மாநிலத்தில் கரோனா தடுப்புப் பணிகளை கண்காணி்ப்பேன்.

கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து மாலைநேரத்தில் நான் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை காணொலி மூலம் கண்காணித்து வருகிறேன். தொடக்கத்திலேயே கரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமடைந்துவிடலாம்.

நான் சிகிச்சையில் இருப்பதால் எனக்குப் பதிலாக கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தை உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நகரமேம்பாட்டுத்துறை அமைச்சர் பூபேந்திர சிங், மருத்தும் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங், சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி ஆகிோயர் கண்காணிப்பார்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் சிவராஜ் சவுகான் கரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் விரைவாக குணமடைந்து வர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் மற்றும், பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x