Published : 25 Jul 2020 12:48 PM
Last Updated : 25 Jul 2020 12:48 PM
கர்நாடகாவில் கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு வாங்கிய விலையை விட கூடுதல் விலைக்குக் கர்நாடக அரசு வாங்கியிருப்பதாகவும் முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சித்தராமையா கூறியதாவது:
''கர்நாடகாவில் கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக கடந்த 3-ம் தேதி கூறினேன். இது தொடர்பான விவரங்களை அளிக்கும்படி 20-க்கும் மேற்பட்ட முறை தலைமைச் செயலர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினேன். இதுவரை யாரும் என் கடிதத்திற்குப் பதில் அளிக்கவில்லை. 17 நாட்கள் கழித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு, நான் கூறியவை உண்மையல்ல என பதில் அளித்திருக்கிறார்.
கர்நாடகாவில் கரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதற்காக எடியூரப்பா அரசு இதுவரை ரூ.4167 கோடி செலவு செய்துள்ளது. இதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. தற்போது சந்தையில் உள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து அனைத்து உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு ஒரு வென்டிலேட்டரை ரூ.4 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சம் வரைக்கும் வென்டிலேட்டர்களை வாங்கியுள்ளது. தரமான தெர்மல் ஸ்கேனர் தற்போது சந்தையில் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு அதனை ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. சந்தையில் ரூ. 330-க்கு விற்கப்படும் கரோனா பாதுகாப்புக் கவச உடைகளை, ரூ.2 ஆயிரத்து 112 கொடுத்து வாங்கியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 5 லட்சம் கரோனா சிகிச்சை உபகரணங்கள் சீனாவில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சம் உபகரணங்கள் தரமானது அல்ல அரசு நிராகரித்துள்ளது. இந்திய ராணுவ வீரர்களைக் கொன்ற சீனாவில் இருந்து கரோனா உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்?
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் உபகரணங்கள் கர்நாடகாவுக்கு மட்டும் 2 அல்லது 3 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது ஏன்? மக்கள் வரிப்பணத்தில் அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்?
மக்கள் உயிருக்குப் போராடும் சூழலிலும் கரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருக்கிறார்கள். பாஜகவின் இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த முறைகேடு குறித்து உடனடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்''.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு, மருத்துவ உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் சுதாகர், ''கடந்த காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் 2019-ம் ஆண்டு ஒரு வென்டிலேட்டர் ரூ. 21 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் அதிநவீன வென்லேட்டரை ரூ.18 லட்சத்துக்கு வாங்கியுள்ளோம். சித்தராமையாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அதைச் சட்டரீதியாகச் சந்திக்கத் தயராக இருக்கிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT