Last Updated : 25 Jul, 2020 08:56 AM

 

Published : 25 Jul 2020 08:56 AM
Last Updated : 25 Jul 2020 08:56 AM

கர்நாடகாவில் அரசு பள்ளியின் பொன் விழாவை முன்னிட்டு 50 ஏக்கரில் நாற்று நட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள்

வயலில் நடவுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள்

பெங்களூரு

கர்நாடகாவில் பள்ளியின் பொன் விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து 50 ஏக்கர் தரிசு நிலத்தில் நெல் பயிரிட்டு கொண்டாடியுள்ளனர்.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள நிட்டூரில் அரசு உயர் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பொன்விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரியில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது தலைமை ஆசிரியர் முரளி கடேகர் பேசும்போது, “இந்த ஆண்டு பள்ளியின் பொன்விழாவை வெகு விமரிசையாகவும், ஆக்கப்பூர்மாகவும் கொண்டாட வேண்டும்.35 ஆண்டுகளுக்கு முன், முதன்முதலில் நான் இந்தப் பள்ளிக்கு வேலைக்கு வந்தபோது, சுற்றியுள்ள நிலங்கள் யாவும் நெல் பயிரிடப்பட்டு பசுமையாக காட்சிஅளித்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் யாரும்விவசாயம் செய்யாமல் தரிசாக மாறிவிட்டது. இது வருத்தமாக இருக்கிறது.

பொன்விழா ஆண்டில் சுற்றியுள்ள வயல்கள் பசுமையாக மாற வேண்டும். நிட்டூர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை பயிரிட நான் அனுமதி பெற்றிருக்கிறேன். மேலும் பள்ளியை சுற்றியுள்ள பல வயல்கள் நம் முன்னாள் மாணவர்களுக்கு சொந்தமானவை. அவர்களும் அனுமதி அளித்தால் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்மக்கள் இணைந்து நெல் பயிரிடலாம். அதில் விளையும் நெல்லை கோயிலுக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாம்” என்றார்.

முரளி கடேகரின் இந்த யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ‘தரிசு நிலத்தை மீண்டும் விளைய வைப்போம்' என்ற அமைப்பை தொடங்கி, விவசாயப் பணிகளில் இறங்கினர். இதை அறிந்த உடுப்பி எம்எல்ஏ ரகு பட் தாமாக முன்வந்து, இம்முயற்சியில் கைகோத்தார்.

கடந்த மே மாதம் முதல்கட்டமாக 50 ஏக்கர் நிலம் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நிட்டூரை சேர்ந்த 5 கிராம மாணவர்களின் பெற்றோரை கொண்டு 5 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு தரிசு நிலத்தை திருத்துவது, சமன் செய்வது, நீர் பாய்ச்சி விதைப்பது, நாற்று நடுவது, களை பறிப்பது என பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

இந்தப் பணிகள் முறையாக நடந்த நிலையில் கடந்த 15-ம் தேதி நெல் நாற்று நடவுப் பணி தொடங்கியது. உடுப்பி எம்எல்ஏ ரகுபட், தலைமை ஆசிரியர் முரளி கடேகர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சேற்றில் இறங்கி நாற்று நட்டனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் மேலும் 25 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யுமாறு நிட்டூர் பள்ளி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x