Published : 25 Jul 2020 08:47 AM
Last Updated : 25 Jul 2020 08:47 AM
டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் கரோனா வைரஸ் வளைகோடு சரிந்து வருவதைக் காண்கிறோம், பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதற்காக நாம் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டுவிடக்கூடாது என்று எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
தேசிய நோய்தடுப்பு அமைப்பின் உறுப்பினரும், எய்ம்ஸ் இயக்குநரும் மருத்துவரான ரன்தீப் குலேரியா நேற்று செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது
நகரங்கள் வாரியாக ஊரடங்கு கொண்டுவருவது கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவுமா?
மிகப்பெரிய அளவில் கரோனா பரவல் இருந்தால் அந்த இடங்களில் தீவிரமான ஊரடங்கை அமல்படுத்தலாம். ஆனால், லாக்டவுன் மூலம் மட்டுேம கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. வீட்டுக்கு வீடு சென்று மக்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கரோனா இருந்தால், அறிகுறி இருந்தால், அவர்களை தனிமைபப்டுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். அப்போதுதான் பரவலைத்தடுக்க முடியும்
தொற்றுநோயியல் கூற்றுப்படி கரோனா பரவல் உச்சத்துக்குச் சென்றுவிட்டால், பாதிப்பு சரியத்தொடங்கிவிடும். டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் சரிந்து வருவதாக நம்புகிறீர்களா ?
நாட்டின் பல்வேறு நகரங்களில், பல்வேறு காலகட்டங்களில் கரோனா பரவல் உச்சத்தை அடையும். டெல்லி, மும்பை, அகமதாபாத், தென் மாநிலங்களில் சில நகரங்களில் கரோனா வளைகோடு சரியத்தொடங்கி இருப்பதாகவே நம்புகிறோம்.
கரோனா வளைகோடு சரிகிறது என்பதற்காக கவனக்குறைவாக, பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்துவிடக்கூடாது. ஆனால், கரோனா பரவல் குறைந்தவுடன் மக்கள் தங்களுக்கு நோய்தடுப்பாற்றல் வந்துவிட்டதாக நினைத்து முகக்கவசம் அணியாமல் சமூக விலகலைப் பின்பற்றாமல் இருந்தால், மற்றொரு அலை வந்துவிடும்.
ஆனால், மற்ற பகுதிகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிஹார், அசாம் மாநிலங்களில் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தியர்கள் எவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமானவர்களாக இருக்கிறார்கள்?
இந்கியாவில் மக்கள் நெருக்கம் அதிகம். அடிக்கடி ஏதாவது நோய்கள் உண்டாகி, அதில் பாதிக்கப்பட்டு, அதனால் மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இயற்கையாக ஏற்பட்டிருக்கும். அதுமட்டுமல்லாமல், ஒரே அறையில் தங்குதல், கழிவறை பலர் பயன்படுத்துதல் போன்றவை மூலம் இயற்கையாகவே நோய்தடுப்பாற்றல் வந்துவிடும். சிறப்பான நோய்தடுப்பாற்றல் இந்தியர்களுக்கு அமைந்திருப்பதும், முக்கிய அம்சமாக பிசிஜி தடுப்பூசியும்தான் காரணம்.
கரோனா வைரஸைப் போன்று லேசான அறிகுறிகள் கொண்ட ப்ளூகாய்ச்சல் போன்றவை ஆசியாவில் பரவி, அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளார்கள். அது இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கியிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மழைக்காலம், குளிர்காலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாகுமா?
மழைக்காலம், குளிர்காலம் வந்துவிட்டாலே ப்ளூகாய்ச்சல் பரவும் என்பது கவலைக்குரியதுதான். ஆனால், கரோனா புது வைரஸ் மனிதர்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை, மழை, குளிர்காலத்தில் எவ்வாறு செயல்படப்போகிறது என்பதும் இதுவரை தெரியவில்லை. ஆனால், மனிதர்களுக்குள் இது நீண்டகாலம் இருக்கப்போகிறது.
கோடைக்காலத்தைவிட மழைக்காலத்தில் நீண்டநேரம் வைரஸ் வாழும்தன்மை கொண்டவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், கரோனா வைரஸ் எவ்வாறு செயல்படும் என்பது இப்போதே கூறுவது என்பது இயலாது. மேற்கத்திய நாடுகளில் குளிர்காலத்தைப்பற்றிய அச்சம், கரோனாவில் இப்போதே வந்துவிட்டது.
கடந்த 1980களில் உருவான இன்ப்ளூயன்ஸா பெருந்தொற்று குளிர்காலத்தில் 2-வது கட்ட அலையை ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆதலால், எவ்வாறாகினும் நாம் கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டுவிடக்கூடாது
இவ்வாறு குலேரியா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT