Published : 07 Sep 2015 02:13 PM
Last Updated : 07 Sep 2015 02:13 PM
நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிரான தாம் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பு நாளை டெல்லியில் துவங்கி நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘நாளை எங்கள் கட்சியின் எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பஞ்சாப், உபி, மபி, ஹரியானா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்களிடம் கலந்து ஆலோசித்த பின் கூட்டம் குறித்த அறிவிப்பு அளிக்கப்படும். நிலமசோதா மீதான வெற்றிக் கூட்டமாக நடத்தப்படும் இதில், சோனியா, ராகுல் உட்பட பல முக்கியத் தலைவர்கள் உரையாற்றுவார்கள்’ எனக் கூறுகின்றனர்.
கடந்தமுறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது நிலம் கையகப்படுத்தும் மசோதா. இது, புதிதாக பிரதமர் நரேந்தர மோடி தலைமையில் அமைந்த மத்திய அரசால் பல முக்கிய திருத்தங்கள் செய்து மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கிடையே, அவசர சட்டமாக இயற்றப்பட்ட அந்த மசோதா, நான்காவது முறை மறுபிரகடனம் செய்யாமல் பின் வாங்கப்பட்டது. பிரதமர் மோடியால் அளிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, தன் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கருதும் காங்கிரஸ், அதன் மீது மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
மத்தியில் அமைந்த தேசிய ஜனநாயக முண்ணனி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கடந்த மாதம் விவசாயிகள் பேரணி எனும் பெயரில் முதல் கூட்டம் நடத்தியது. அதன் பிறகு, இரண்டாவதாக நிலமசோதா மீதான இந்தக் கூட்டம் பெரிய அளைவில் நடத்தப்பட உள்ளது. இது மிக விரைவில் வரவிருக்கும் பிஹார் மாநில தேர்தலின் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT