Published : 24 Jul 2020 05:08 PM
Last Updated : 24 Jul 2020 05:08 PM

ராஜ்பவனை முற்றுகையிட வேண்டும் என மக்களை தூண்டி விடுவதா?- அசோக் கெலோட்டுக்கு பாஜக கண்டனம்

பாஜக மூத்த தலைவர் கட்டாரியா

ஜெய்பூர்

ராஜ்பவனை முற்றுகையிட வேண்டும் என மக்களை தூண்டி விடுவதா என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட்டை பாஜக கண்டித்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்தது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்கவும் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவால் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கூறியதாவது:
ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். வரும் திங்கள் முதல் அவை நடவடிக்கைகள் தொடங்க வேண்டும். கரோனா வைரஸ் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே அவையை கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமும் வேண்டிக் கொண்டேன்.

நேற்று இரவே ராஜ் பவனில் இருந்து உத்தரவு வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. யாருடைய நெருக்கடியால் ஆளுநர் தாமதப்படுத்துகிறார் எனத் தெரியவில்லை. இதனை எதிர்த்து ராஜ்பவனை முற்றுகையிட்ட மக்கள் நாளை போராட்டம் நடத்துவார்கள்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலோட் இன்று பிற்பகல் ராஜ்பவனுக்கு சென்றார். ராஜ்பவனுக்கு வெளியே எம்எல்ஏக்கள் அணி வகுத்தனர்.

பின்னர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் கெலோட் மட்டும் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவையை க் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கட்டாரியா கூறியதாவது:
ராஜ்பவனில் கூடி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டம் அருவெறுக்க தக்கது. ஆளுநருக்கு எதிராக எழுப்பிய கோஷம் கண்டிக்க தக்கது. எந்த ஒரு முதல்வரும் செய்ய துணியாததை அசோக் கெலோட் செய்துள்ளார். ராஜ்பவனை முற்றுகையிட வேண்டும் என மக்களை தூண்டி விடும் முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. இது தவறானது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x