Last Updated : 24 Jul, 2020 02:55 PM

1  

Published : 24 Jul 2020 02:55 PM
Last Updated : 24 Jul 2020 02:55 PM

சுதந்திர தினத்தன்று கூட்டத்தைத் தவிருங்கள்; சுகாதாரப் பணியாளர்கள், கரோனாவிலிருந்து குணமடைந்தோரைக் கவுரவியுங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று கூட்டமாகக் கூடிக் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடித்து விழாவைக் கொண்டாடலாம். கரோனாவிலிருந்து குணமடைந்தோர், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை விழாவில் கவுரவிக்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், நாட்டின் 74-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சுதந்திர தின விழா அதே உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டும்.

ஆனால், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது கரோனா வைரஸ் பரவல் சூழலை மனதில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையான தடுப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிந்து வருதல், முறையாக சானிடைசர் பயன்படுத்துதல், கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்தல், எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

டெல்லி செங்கோட்டையில் வழக்கம்போல் ஆயுதப்படை, டெல்லி போலீஸார் அணிவகுப்பு மரியாதையை பிரமதர் ஏற்பது, தேசியக் கொடியேற்றியபின் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்துதல், பிரதமர் உரை, தேசிய கீதம் பாடுதல், பலூன்கள் பறக்கவிடுதல் போன்றவை இருக்கும். அதேபோல பாதுகாப்புப் படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஆனால், சுதந்திர தின நிகழ்ச்சி நடத்தும்போது, மாநிலங்கள் பல்வேறு நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தரப்பட்டுள்ளன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காலை 9 மணிக்கு சுதந்திர தின நிகழ்ச்சி தொடங்க வேண்டும்.

முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுதல், தேசிய கீதம் பாடுதல், காவல் அதிகாரிகள், காவலர்கள், துணை ராணுவப் படையினர், ஊர்க்காவல்படை, என்சிசி, ஸ்கவுட் போன்றவர்களுக்கு விருது வழங்குதல், முதல்வரின் உரை போன்றவை இருக்க வேண்டும்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள், கரோனா முன்களத்தில் போராடிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் சேவையைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கலாம்.

இதேபோன்ற நிகழ்ச்சிகளை மாவட்ட அளவிலும், மண்டலம், பஞ்சாயத்து அளவிலும், கிராமங்களிலும் நடத்தலாம்.

மாநிலங்களிலும் படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சியும் நடப்பது என்பது அந்தந்த மாநில ஆளுநர், துணைநிலை ஆளுநர் விருப்பத்துக்கு உட்பட்டதாகும்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போது சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கூட்டத்தைத் தவிர்த்தல், நோய்த்தொற்றுக்கு ஆளாகுபவர்களைப் பாதுகாத்தல் போன்றவை செய்யப்பட வேண்டும்.

மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து, தொழில்நுட்பத்தைச் சிறப்பான முறையில் பயன்படுத்தி, விழாவைக் கொண்டாட வேண்டும். நிகழ்ச்சிகளை மக்கள் ஆன்லைன் மூலம் காண்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

பிரதமர் மோடி அறிவித்த ஆத்ம நிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) திட்டத்தைப் பரப்பும் வகையில் விளம்பரம் செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நிகழ்ச்சிகள் விளக்குதல், சமூக ஊடகங்களில் பிர்சசாரம் செய்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x